ஊக்கமருந்து பயன்படுத்திய போக்பாவுக்கு 4 ஆண்டுகள் போட்டித் தடை
ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக பிரான்ஸ் உதைப்பந்தாட்ட அணியின் மத்திய கள வீரரும், இத்தாலி கழகமான ஜூவென்டஸின் போல் போக்பாவுக்கு உதைப்பந்தாட்டத்திலிருந்து நான்கு ஆண்டுகள் தடை விதித்தது பிபா.
கடந்த செப்டம்பரில் இத்தாலியின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு (NADO ITALIA) சங்கத்தின் திர்பால் போக்பா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அப்போது அவர் உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பொருளை பயன்படுத்தியது குறித்து விசாரணை தொடங்கிய நிலையில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதியன்று ஜூவென்டஸ் கழகம் 3:0 என்ற கோல்கள் கணக்கில் சீரி ஏ தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், போல் போக்பா உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் போட்டியில் அவர் விலையாடியிருக்கவில்லை. அவர் உதிரி வீரராக வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தார். அப்படி இருந்தும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் சிக்கினார்.
போக்பாவின் ஊக்கமருந்து மறு ஆய்வு சோதனை அக்டோபர் மாதம் நடத்தப்பட்டு அதிலும் உறுதி செய்யப்பட்டது. இதற்கு எதிராக இத்தாலியின் ஊக்கமருந்து எதிர்ப்பு சங்கத்துடன் பேச வேண்டாம் என்று முடிவு செய்த போக்பா, இந்த வழக்கை இத்தாலியின் ஊக்கமருந்து எதிர்ப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இத்தாலியின் தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக தண்டனை பகிரங்கப்படுத்தப்படாததால், வழக்கை நேரடியாக அறிந்த ஒருவர், பால் போக்பாவுக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு தடையை உறுதிப்படுத்தினார்.
இது குறித்து போல் போக்பாவின் கழகமான ஜுவென்டஸ் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கவில்லை. சுவிட்சர்லாந்தை மையமாக கொண்ட விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் போக்பா மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போல் போக்பா அடுத்த மாதம் 31ஆவது வயதை எட்டவுள்ள நிலையில், இந்த 4 வருட போட்டித் தடைத் தண்டனை போக்பாவின் உதைப்பந்தாட்ட வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரக்கூடும் எதிர்பார்க்கலாம்.
(அரபாத் பஹர்தீன்)