உள்நாடு

மின்சார பில்லை 37% ஆல் குறைக்காமல் தொடர்ந்தும் கேம் அடிக்க தயாராக வேண்டாமென அமைச்சரை வலியுறுத்துகிறோம்.. -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.02.27)

மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் செய்கையில் அரசாங்கம் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் செயலாற்ற தயாராகிய வேளையில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்களும் மேலும் சில அமைப்புகளும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் விடயங்களை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டோம். மின்சார சபையின் உத்தியோகத்தர்கள் ஏறக்குறை 3.34% ஆல் பில்லைக் குறைக்க முடியுமென முதலில் கூறினார்கள். 2023 ஒக்டோபர் மாதத்தில் சட்டவிரோதமாக 18% ஆல் மின்சார பில் அதிகரிக்கப்பட்டது. வருடத்திற்கு இருதடவைகள் திருத்தப்பட வேண்டியபோதிலும் எதிர்காலத்திலும் தாக்கமேற்படுத்தக்கூடியவகையில் மூன்று தடவைகள் திருத்தம் செய்யப்பட்டது. ஒக்டோபர் மாதத்தில் நிலவிய விலைமட்டங்களுக்கே மீண்டும் கொண்டுவருவதாக மின்சக்தி அமைச்சர் தற்போது கூறுகிறார். அவர்கள் கூறுகின்ற விடயங்களின்படி மின்சார சபையின் மொத்த வருமானம் 710 பில்லியன் ரூபாவாக அமையுமிடத்து மொத்தச் செலவு 688 பில்லியன் ரூபாவாகும். அனைத்துச் செலவுகளையம் தீர்த்தபின்னர் 23 பில்லியன் ரூபா மிகைநிலை காணப்படுவதாகவும் அதற்கமைவாக 3.34% ஆல் பில்லைக் குறைக்கமுடியுமெனவும் கூறினார்கள். எனினும் நாங்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் விடயங்களை எடுத்துரைத்து மின்சாரக் கொள்ளளவின் கிரயம் 50 பில்லியனில் இருந்து 133 பில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் விநியோக கிரயம் ஏறக்குறைய 150%ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதெனவும் சுட்டிக்காட்டினோம். வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன் வட்டியாக 53 பில்லியன் ரூபா செலுத்தப்பட வேண்டுமென சபை கூறியுள்ளது. ஆனால் நிகழ்கால வட்டியாக 45 பில்லியன் மாத்திரமே செலுத்தப்பட வேண்டும்.

பாவனையாளர்களை சுரண்டி தீத்தொழில் புரிகின்றவர்களின் கீழ்த்தரமான நோக்கங்களுக்காக அமைச்சரும் உத்தியோதகத்தர்களும் செயலாற்றி வருகிறார்கள் என்பதை நாங்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டினோம். 2023 மின்சார சபையின் இலாபம் 48 பில்லியன் என அவர்கள் கூறினார்கள். மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிதாக சமர்ப்பித்துள்ள தரவுகளின்படி செலவினை 93 பில்லியனால் குறைக்க முடியுமென கூறியுள்ளது. கணக்கீட்டுக் கொள்கைகளின் பிரகாரம் மின்சார சபையின் விலைகள் இலாபமீட்டுகின்ற நோக்கத்தின் அடிப்படையிலன்றி செலவுகளை தீர்த்துக்கொள்கின்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படல் வேண்டும். ஆசியாவின் ஏனைய நாடுகளைவிட எமது நாட்டின் மின்சார பில் 50% அதிகமானதாகும். அதனாலேயே கைத்தொழில்கள் சீரழிந்துள்ளன. நாட்டின் அபிவிருத்தியில் நேரடியாகவே மின்சார பில் தாக்கமேற்படுத்துவதாலேயே மின்சார பில்லைக் குறைத்தல் சம்பந்தமாக நாங்கள் விடயங்களை முன்வைக்கிறோம். இப்போது 93 பில்லியனால் செலவினைக் குறைக்க முடியுமென கூறுகின்ற அமைச்சரும் உத்தியோகத்தர்களும் ஏன் ஆரம்பத் தருணத்தில் அதனை மறைத்து வைத்தார்கள்? 2023 இல் மின்சார சபையின் இலாபம் 62 பில்லியன் என இன்றளவில் வெளிப்பட்டுள்ளது. மேலும் 14 பில்லியனால் இலாபம் அதிகரித்துள்ளது. வட்டிக்காக அதிகமாக உள்ளடக்கப்பட்டிருந்த 08 பில்லியன் இலாபத்துடன் சேர்ந்து 70 பில்லியன் ரூபா மேலதிக இலாபத்திற்கு மின்சார பிறப்பாக்க மற்றும் விநியோகச் செலவு என்றவகையில் அதிகமாக சேர்க்கப்பட்டிருந்த 140 பில்லியன் இருக்கின்றது. இதன்படி மின்சார சபையின் 210 பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட மேலதிக தொகை கணக்குகளுக்கிடையில் மறைத்துவைக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. மொத்தச் செலவு 680 பில்லியன் என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அந்த செலவில் 210 பில்லியன் குறைந்ததும் 470 பில்லியன் வரை செலவுகள் குறைவடைகின்றன. அதன்படி மின்சார பில்லை 37%ஆல் குறைக்கமுடியும்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவானது கஞ்சன விஜேசேகர அமைச்சருடையதன்று: அது நாட்டு மக்களின் ஆணைக்குழுவென்பதை நாங்கள் அந்த உத்தியோகத்தர்களிடம் கூறினோம். அமைச்சரின் மன ஆசைகளை நிறைவுசெய்தல், உயரதிகாரிகளின் தீத்தொழிலைப் பாதுகாத்தல் ஆணைக்குழுவின் செயற்பொறுப்பு அல்லவென்பதை தெளிவுபடுத்திக் கூறினோம். இந்த விலையைக் குறைக்காமல் தொடர்ந்தும் கேம் அடிக்க தயாராக வேண்டாமென அமைச்சரை வலியுறுத்துகிறோம். நாங்கள் முன்வைத்த விடயங்களை செவிமடுத்தமைக்காக நாங்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணக்குழுவிற்கு நன்றி கூறிக்கொள்கிறோம். இதற்கு முன்னர் நடந்துகொண்ட விதத்திற்கிணங்க நடந்துகொள்ளாமல் மக்களிடமிருந்து கருத்துக்களைப்பெற்று, மீண்டும் மின்சார சபையிடமிருந்து தரவுகளைப் பெற்று செயலாற்றியமைக்காக நன்றி கூறுகிறோம். மீண்டும் கூடி மின்சார பில் திருத்தம் சம்பந்தமாக மக்களின் பக்கத்தில் நின்று தீர்மானத்தை வழங்குமாறு ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறோம். மின்சாரசபையின் செலவுகளை 210 பில்லியனால் குறைக்க முடியுனெ நாங்கள் சுட்டிக்காட்டியது குறைந்தபட்ச மட்டமாகும். தொடர்ந்தும் மக்களை துன்புறுத்தி சுரண்டுகின்ற தீத்தொழிலுக்கு துணைபோகவேண்டமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறோம். அதைப்போலவே அமைச்சரும் சபையின் உயரதிகாரிகளும் தான்தோன்றித்தனமாக மறைக்க முயற்சிசெய்த செலவுகள் அம்பலமாகி உள்ளதென்பதையும் வலியுறுத்துகிறோம். கடந்த 15 ஆந் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் வரலாற்றில் முதல்த்தடவையாக நாங்கள் விடயங்களை முன்வைத்த பின்னர் அது பற்றிக் கலந்துரையாடப்பட்டுள்ளது. மீண்டும் அமைச்சர் கஞ்சனவின் பிடிக்கு கட்டுப்படாமல் உண்மையாகவே 37%ஆல் குறைக்க இயலுமான மின்சார பில் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக்கூடிய வாய்ப்பினை தட்டிக்கழிக்க வேண்டாமென வலியுறுத்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *