நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் பெப்ரவரி 29- காரணம் என்ன? – கலாபூஷணம் யாழ் பரீட் இக்பால்
ஓர் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வந்தால் அந்த ஆண்டானது நெட்டாண்டு என அழைக்கப்படுகிறது. நான்கால் மீதியின்றி வகுபடும் நாட்களே லீப் வருடம் என நாம் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால், நான்கால் மீதியின்றி வகுபடக்கூடிய நூற்றாண்டுகளான கடந்த 1700, 1800, 1900 ஆம் ஆண்டுகள் லீப் வருடங்களாக உள்வாங்கப்படவில்லை. அதாவது பெப்ரவரி மாதத்தில் 28 நாட்களே இருந்தன. மேலும் எதிர்வரும் நான்கால் மீதியின்றி வகுபடக்கூடிய நூற்றாண்டுகளான 2100, 2200, 2300 ஆம் ஆண்டுகளும் லீப் வருடங்களாக உள்வாங்கப்படமாட்டாது. இது உங்களுக்கு தெரியுமா? ஆராய்வோம்.
உரோமர்கள் காலத்தில் ரொமுலஸ் எனும் மன்னனுக்கு அன்றாட நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு நாட்காட்டி தேவைப்பட்டது. பௌர்ணமி தினங்களை கணக்கில் கொண்டே இந்த நாட்காட்டி அமைக்கப்பட்டது. ஆனால், எத்தனை நாட்கள் என்பது தெளிவில்லாமலே இருந்தது.
ரோமின் இரண்டாவது மன்னனான நூமா பொம்பிலஸ் வருடத்திற்கு 354 நாட்கள் வருமாறு 12 மாதங்களை உள்ளடக்கி நாட்காட்டியை திருத்தம் செய்தார். இந்த நாட்காட்டியானது ஆரம்ப காலத்து லூனார் நாட்காட்டி விதிப்படி அமைந்ததால் தொடர்ந்தும் லூனார் நாட்காட்டி என்றே அழைக்கப்பட்டு வந்தது. லூனார் நாட்காட்டியில்பௌர்ணமி தினங்களை சரியாகக் காட்ட முடியவில்லை. எனவே, மன்னன் நூமா பொம்பிலஸ் வருடத்தின் நாட்களை ஒன்றால் கூட்டி 355 நாட்களாக நாட்காட்டியை திருத்தம் செய்தார். அப்போதும் தொடர்ந்தும் நாட்காட்டி பௌர்ணமி தினங்களை சரியாக காட்டவில்லை. அதாவது, பூமி சூரியனைச் சுற்றிவரும் நாட்களுக்கும் லூனார் நாட்காட்டியின் நாட்களுக்கும் வித்தியாசம் இருந்ததே காரணம். பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் நாட்களானது நுணுக்கமான முறையில் அறிந்து கொள்ள முடியவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில்தான் எகிப்தியர்கள் மிகவும் நுணுக்கமான முறையில் பூமியானது ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள், 5 மணித்தியாலங்கள், 49 நிமிடங்கள், 16 செக்கன்கள் எடுக்கிறது என ஆய்வின்போது அறிந்து கொண்டனர்.
கி.மு. 45 ஆம் ஆண்டு ரோமின் பேரரசர் ஜூலியஸ் ஸீஸர் லூனார் நாட்காட்டியை ஒதுக்கி வைத்துவிட்டு, எகிப்தியர் ஆய்வின்போது அறிந்துகொண்ட 365 நாட்களைக் கொண்ட புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார்.
ஜூலியஸ் ஸீஸர் வருடத்திற்கு 365 நாட்கள் என்றும் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வருடம் 366 நாட்கள் எனவும் நாட்காட்டியை வடிவமைத்தார். இந்த மேலதிக ஒரு நாளை எந்த மாதத்தில் கூட்டுவது என்று யோசித்தார். பெப்ரவரி என்றால் ரோமர்களின் பழங்குடியினரின் பாஷையில் சுத்தப்படுத்துதல் என்பதுதான் அர்த்தம். எனவே, பெப்ரவரி மாதத்தின் 28 உடன் சேர்க்கப்பட்டது. இதுவே நெட்டாண்டு என அழைக்கப்படுகிறது. இக்கலண்டரானது ஜூலியன் கலண்டர் என அழைக்கப்பட்டு வந்தது.
பெப்ரவரி 29 ஆனது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வருவதால் பெப்ரவரி 29 இல் பிறந்த குழந்தையானது நான்கு வருடங்களுக்கு ஒருமுறையே பிறந்த நாள் கொண்டாட முடியும். குழந்தைகளின் பிறந்த நாள் எதிர்பார்ப்பை கவனத்தில் எடுத்து அண்மையில் மேற்கத்தேய பேராசிரியர் ஒருவர் பெப்ரவரி 29 அன்று பகல் 12 மணிக்கு முன்பு பிறந்தால் பெப்ரவரி 28 இலும் பெப்ரவரி 29 அன்று பகல் 12 மணிக்கு பின்பு பிறந்தால் மார்ச் 01 இலும் பிறந்த நாள் கொண்டாட முடியும் என அறிவித்துள்ளார். மேலும் சராசரியாக 1461 பேரில் ஒருவர் பெப்ரவரி 29இல் பிறக்கிறார் என்றும் அறிவித்துள்ளார்.
பெப்ரவரி 29 இல் பிறந்தவர்கள் வித்தியாசமான செயற்பாடுகளை உடையவராக காணப்படுவர் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் பெப்ரவரி 29 இல் பிறந்தவர். அவர் தினந்தோறும் காலையில் தனது சிறுநீரை அருந்துவாராம். அவரே பேட்டியொன்றின் போது இதனைக் கூறியுள்ளார். செய்தியாளர் கேட்ட கேள்விக்கு மொரார்ஜி தேசாய் தனது சிறுநீரை அருந்துவதால் தனக்கு உற்சாகம் பிறக்கிறது; நோயில்லாமல் வாழ வழி செய்கிறது என கூறியுள்ளார்.
திருச்சபைக்காக உயிர்ப்பு பெருவிழாவைக் கணிப்பதற்கு கி.பி. 325 ஆம் ஆண்டு வானவியல் அறிஞர்கள் கூடி அக்காலத்தில் பழக்கத்தில் இருந்த ஜூலியன் கலண்டரை பயன்படுத்தினர். உயிர்ப்பு பெரு விழா என்பது ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்திலிருந்து உயிர்த்ததைக் குறிப்பதாகும். கிறிஸ்தவ திருவழிபாட்டு கால அட்டவணையில் இது மிக முக்கிய திருநாளாகும். பௌர்ணமி தினத்தை தொடர்ந்து வரும் ஞாயிறு தினத்திலேயே உயிர்ப்பு பெருவிழா கொண்டாடப்பட்டுவந்தது. கி.பி. 325 இல் கணிக்கப்பட்ட அந்த பட்டியலில் ஆண்டுகள் செல்லச் செல்ல முழுநிலவு நாளுக்கு பின்வரும் ஞாயிறில் உயிர்ப்பு பெருவிழா அமையவில்லை. உயிர்ப்பு பெருவிழா நாள் கடந்து போய்க் கொண்டிருந்தது. ஏனெனில், இந்த அணுகுமுறையானது ஜூலியன் கலண்டர் கணக்கின்படி வருடத்தில் சரியாக 365 ¼ நாட்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டதுதான். இந்தக் கலண்டரின்படி பௌர்ணமி தினங்களும் அன்றைய நாளில் உண்மையிலேயே வந்த பௌர்ணமி தினங்களும் முழுமையாக ஒத்துவரவில்லை. 10 நாட்கள் வரை வித்தியாசம் காணப்பட்டது .
1572 முதல் 1585 வரை பாப்பரசராக இருந்த போப் 13 ஆம் கிரகோரி அவர்கள்,, வானவியல் வல்லுநர்கள் லிலியுஸ், கிலேவியுஸ் ஆகியோர் சேர்ந்து புதிய கலண்டர் முறையை அறிவித்தனர். 1582 ஆம் வருடத்தின் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை அதனது 10 நாட்கள் நீக்கப்பட்டன.(05-10-1582 ஆனது 15-10-1582 ஆக மாற்றம் செய்யப்பட்டது) இதன்மூலம் பௌர்ணமி தினம் 10 நாட்கள் பிந்தி வருவது சரி செய்யப்பட்டது.
ஜூலியன் கலண்டரில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஒரு மேலதிக நாள் (லீப் வருடத்தில்) சேர்ப்பதால் நாட்காட்டியில் 43 நிமிடங்கள் 12 செக்கன்கள் மேலதிகமாக சேர்க்கப்படுகின்றன. இதுதான் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்று நாட்கள் அதிகரிக்கின்றன. இதன் காரணமாகத்தான் 10 நாட்கள் வித்தியாசப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. 13 ஆம் பாப்பரசர் கிரகோரி அவர்கள் ஓர் ஆண்டின் எண்ணை மீதியின்றி நான்கால் வகுக்க முடியுமாயின் அது ஒரு லீப் வருடமாகும்; ஆனால், 400 ஆல் மீதியின்றி வகுக்கப்பட முடியுமான நூற்றாண்டுகள் மாத்திரமே லீப் வருடங்களாக கணிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி 1700, 1800, 1900 ஆகிய நூற்றாண்டுகள் லீப் வருடத்திற்குள் உள்வாங்கப்படவில்லை. எதிர்வரும் 2100, 2200, 2300 ஆகிய நூற்றாண்டுகளும் லீப் வருடத்தில் உள்வாங்கப்படமாட்டாது .ஆரம்பத்தில் லூனா கலண்டர், இடையில் ஜூலியன் கலண்டர், அதை தொடர்ந்து வந்த கிரகோரியன் கலண்டர் முறைதான் உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது.
கிரகோரியன் கலண்டரை உடனடியாக பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற கத்தோலிக்க நாடுகள் அமுல்படுத்தின. புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ நாடுகள் காலம் தாழ்த்தியே அமுல்படுத்தின. இங்கிலாந்து 1752 ஆம் ஆண்டிலும் ரஷ்யா 1917 ஆம் ஆண்டிலும் கிரேக்கம் 1923 ஆம் ஆண்டிலும் கிரகோரியன் கலண்டரை அமுல்படுத்தின.
இங்கிலாந்து நாடானது காலம் தாழ்த்தி கிரகோரியன் கலண்டரை அமுல்படுத்தியதால் 11 நாட்கள் முற்படுத்த வேண்டியேற்பட்டது. 1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி 14 ஆம் திகதியாக அமுல்படுத்தப்பட்டது.(03-09-1752 ஆனது 14-09-1752 ஆக மாற்றம் செய்யப்பட்டது)
தற்போது இந்த கிரகோரியன் கலண்டர்தான் உலகெங்கும் பாவிக்கப்படுகிறது. கலண்டரை சீர்செய்வதற்கு பூமி ஒருமுறை , சூரியனைச் சுற்ற எடுக்கும் நேரத்தை துல்லியமாக அறிவதே மிக முக்கிய விடயமாக இருந்துள்ளது. இதனை எகிப்தியர்களே முகவும் துல்லியமான முறையில் ஆய்வில் அறிந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்)