பொலிஸ் மா அதிபர் நியமனம்: ஐ. ம. சக்தி அறிக்கை..!
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம் செய்யப்பட்டமை சட்டவிரோதமென ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்ரஞ்சித் மத்தும பண்டார அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது ,
இலங்கையின் 36 ஆவது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதுவரை பதில் பொலிஸ் மா அதிபராக செயற்பட்டமை
இந்நியமனம் சட்டவிரோதமானது மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகளை அப்பட்டமான மீறல் என சுட்டிக்காட்டலாம்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இதுவரை 35 பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு பின்பற்றப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் மீறி மேற்கொள்ளப்பட்ட இந்நியமனம் முற்றிலும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது.இது அரசியலமைப்பை மீறுவதோடு அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்திற்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்டலாம்.
தற்போதைய ஜனாதிபதி தனது விருப்பத்திற்கேற்ப தன்னிச்சையாக செயற்படுவது ஜனநாயகத்திற்கு பாரிய சவாலாகும். இது நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான பாரிய தாக்குதலாகும் என்பதோடு, குறுகிய அரசியல் இலக்குகளை இலக்காகக் கொண்டு இவ்வாறு செயற்படுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.
தேசபந்து தென்னகோன் போன்றதொரு அதிகாரி, தனது தொழில் வாழ்க்கையில் பாரிய மற்றும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட ஒருவர்,பொலிஸ் திணைக்களத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை சமூக நீதிக்கும் சமூக நலனுக்கும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டத்தை மதிக்கும் சமூகத்தின் அடிப்படையானது வலுவான சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தப்படும், ஜனநாயக ஆட்சி முறையின் ஸ்திரத்தன்மை என்பதோடு, இவ்வாறான சட்டவிரோத நியமனங்கள் மூலம் அதன் புனிதத்தன்மைக்கு சவால் விடுவது ஒரு தேசம் எனும் வகையில் வருந்தத்தக்க விடயமாகும்.
தேசபந்து தென்னகோன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளில் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட ஒருவராவார். அக்குற்றச்சாட்டுகளில், கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து, போராட்டக்காரர்களால் கண்டெடுக்கப்பட்ட பணத்தை மீள வழங்காமை தொடர்பிலும் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கும் ஒன்றாகும். (வழக்கு இலக்கம் B22516/22)
இது தவிர உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது சட்டத்தை உரிய வகையில் அமுல்படுத்தாத உத்தியோகத்தர் எனும் மிகப் பாரிய குற்றச்சாட்டுக்கு உள்ளானமை, முன்னாள் பொலிஸ் அதிகாரியான ஷானி அபேசேகரவிற்கு எதிராக அநீதியான முறையில் செயற்பட்டமை தொடர்பான பல்வேறு வழக்குகளில் பிரதிவாதியாக உள்ளவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
இவை தவிர, சட்டவிரோதமான கைது மற்றும் கொடுமைப்படுத்தல் தொடர்பான முறைப்பாடுகள்
தொடர்பில், கடந்த 2023 டிசம்பர் 14 ஆம் திகதி, தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றம் உத்தரவொன்று பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதம் கோட்ட கோ கம மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையிலும் தேசபந்து தென்னகோன் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். இளம் ஊடகவியலாளரான தரிந்து ஜயவர்தனவை அச்சுறுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது தவிர, கைது செய்யப்பட்டவர்களை சித்திரவதை செய்தமை, பல்வேறு சட்டவிரோத அழுத்தங்களை பிரயோகித்தமை தொடர்பிலும் தேசபந்து தென்னகோன் மீது பல்வேறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய காலத்தில், நாட்டில் பாரிய குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.
அவற்றில், ஊடகவியலாளர்கள் மீது, தாக்குதல், அச்சுறுத்தல்கள், கடத்தல்கள், நாடு முழுவதும் பல்வேறு பாரிய படுகொலைகள் இடம்பெற்றமை, பாதாள உலக கோஷ்டியினர் முன்னெப்போதும் இல்லாத வகையில் செயற்படுவதையும் தெளிவாக அடையாளம் காண முடிகின்றது.
இலங்கையில் பொலிஸ் மா அதிபர்களின் நியமன வரலாற்றை உற்று நோக்கினால், சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பை சம்பாதித்த ஒரே பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை குறிப்பிட முடியும்.
அவர் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதோடு, அவரை அவ்வாறு நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அந்த நியமனத்தை ஏற்றுக்கொள்கின்றமை அரசியலமைப்புக்கு முரணானது என, மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அத்துடன், மே 09 ஆம் திகதி கோட்டா கோ கமவில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் அவரைக் கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு சட்டத்தின் பார்வையிலும் முழு சமுதாயத்திலும் பாரிய குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒருவரை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு ஜனாதிபதி நியமித்துள்ளமையானது, அரசியலமைப்பு சபையை புறக்கணிக்கும் செயலாகும் என்பதை சுட்டிக்காட்டலாம். அத்துடன், இது பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்கும் ஒரு களங்கமாகும்.
சிறந்த எதிர்பார்ப்புகளுடன் கூடிய நீதியான சமூகத்தின் அடிப்படையின் அடித்தளமான ஜனநாயகக் கோட்பாடுகளின் அப்பட்டமான மீறலாகவும் இந்த நியமனத்தை குறிப்பிடலாம்.
அதற்கமைய, இந்த முறையற்ற நியமனத்திற்கு எதிராக நாம் கடுமையான கண்டனத்தை வெளியிடுவதுடன், சட்டத்தின் ஆட்சியை நிறுவி ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவது தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முழுமையான பொறுப்பு என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.