வங்கப் புலிகளுக்கு எதிரான தொடர். இலங்கை சிங்கப்படை அறிவிப்பு..!
பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடருக்கான இலங்கை குழாம் இன்று இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்களாதேஷ் சென்று மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் 4,6 மற்றும் 9 ஆம் திகதிகளில் 3 இருபதுக்கு இருபது போட்டிகள் இடம்பெறவுள்ளது. இத் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் கடந்த 3 வாரங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய இன்றைய தினம் இலங்கை கிரிக்கெட் சபை 3 இருபதுக்கு இருபது தொடருக்கான 17 வீரர்கள் கொண்ட இலங்கை குழாத்தை இன்று அறிவித்திருந்தது. அதனடிப்படையில் முதல் இரு ரி20 போட்டிகளில் இலங்கை ரி20 அணியின் தலைவராக வனிந்து ஹசரங்க தடையால் பங்கேற்காமையால் அவருக்கு பதிலாக அணியின் தலைவராக சரித் அசலங்க செயற்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் 3ஆவது இறுதியுமான போட்டியில் வனிந்து ஹசரங்க தலைமை தாங்குவார். மேலும் காயம் காரணமாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிசங்க இக் குழாத்தில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக அவிஷ்க பெர்ணான்டோ இணைக்கப்பட்டுள்ளார்.
மேலும் முதல் இரு போட்டிகளிலும் வனிந்து இல்லாமையால் அவருக்கு பதிலாக சுழல்பந்து சகலதுறை வீரரான ஜெப்ரி வெண்டர்சே அணிக்குள் உள்ளவாங்கப்பட்டுள்ளார். இந்த இரு மாற்றங்களைத் தவிர கடந்த வாரம் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ரி20 தொடரில் அறிவிக்கப்பட்டிருந்த அணியே இத் தொருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(அரபாத் பஹர்தீன்)