உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்; கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்; சர்வதேச ஆய்வரங்கும் ஒத்திவைப்பு..!

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம், முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான இரு நாட்கள் கொண்ட அடையாள வேலை நிறுத்தத்தின் எதிரொலியாக இன்று (28.02.2024) தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளும்  ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன..

நிறைவேற்று உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் எம்.எச். நபார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் ஆகியோரது இணைந்த தலைமையில் இடம்பெற்ற குறித்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் பெருமளவான ஊழியர்கள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தின் காரணமாக 2024.02.29 ஆம் திகதி இடம்பெறவிருந்த 12வது சர்வதேச ஆய்வரங்கு அடுத்த தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின்  செயலாளர் எம்.எம். முகமது காமில் வழிகாட்டலில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் வாக்களிக்கப்பட்ட 107% சம்பள அதிகரிப்பை வழங்கு, உறுதியளித்த 25% MCA கொடுப்பனவை வழங்கு என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இங்கு; ஒற்றுமையே பலம், சமத்துவமே எம் தேவை, அரசாங்கமே கண்முளித்துப்பார், 8 வருட ஏமாற்றம் இன்னும் தொடருமா?, வேண்டாம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம், புத்திஜீவிகளை உருவாக்கும் அரச ஊழியர்களாகிய நாங்கள் நடுத்தெருவில் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் போராட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு சம்மாந்துறையில் அமைந்துள்ள  பிரயோக விஞ்ஞான பீடத்தில் நாளை (29) இடம்பெறவுள்ளது.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *