“முஸ்லிம்களின் சடலங்களை எரியூட்டி முஸ்லிம்களைப் புண்படுத்திய சாபம் கடந்த ஆட்சியாளர்களை விரட்டியடிக்க செய்துள்ளது..” -சஜித் பிரேமதாச
“முஸ்லிம்களின் சடலங்களை எரியூட்டி முஸ்லிம்களைப் புண்படுத்திய சாபம் கடந்த ஆட்சியாளர்களை விரட்டியடிக்க செய்துள்ளது..” என்று ஐ.ம.ச.தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச வரக்காமுறையில் தெரிவித்தார்.
உக்குவளை வரக்காமுர அன்னூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு ஸ்மார்ட் கணினி வசதி வகுப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜ.ம.ச.பிரபல முக்கிய உறுப்பினர்கள் அபிமானிகள் இப்பாடசாலை அதிபர் நிசார் தலைமையிலான ஆசிரிய ஆசிரியைகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலன்விரும்பிகள் ஆகியோர் எனப் பலரும் கலந்துகொண்ட இந் நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் மேலும் உரையாற்றுகையில்…
இப்பாடசாலை உட்பட அரச பாடசாலைகளுக்கு 110வது ஸ்மார்ட் கணனி வகுப்பு வசதிகளை 196 இலட்சம் செலவில் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதுடன் சில பாடசாலைகளுக்கு 80 பஸ் வண்டிகளையும் 380 இலட்சம் செலவில் எமது கட்சி பெற்றுக் கொடுத்துள்ளது. எதிர்வரும் காலங்களிலும் மாத்தளை மற்றும் ரத்தொட்டை ஆகிய பகுதிகளிலமைந்த இனம்காணப்பட்ட பாடசாலைகளுக்கு இவ்வாறான வசதிகளை செய்து கொடுக்கவுள்ளோம். இதன் போது நாம் கட்சி இன குல பேதங்கள் பார்ப்பதில்லை. இந்நாட்டு வரலாற்றில் எந்த அரசும் அமைப்பும் செய்து கொடுக்காத இவ்வாறான வசதிகளை நாம் எதிர்கட்சியாகவிருந்து செய்து கொடுத்து வருவது குறித்து பெருமிதமடைகிறோம்.
இவ்வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் பாடசாலைகளின் அதிபர்கள் அவற்றின் மூலம் மாணவர்கள் பயன்பெறவும் மென்மேலும் மாணவர்கள் தம் அறிவுடன் ஆளுமைகளையும் வளர்த்துக்கொள்ள ஏற்ற உத்திகளை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கவேண்டும் சில பாடசாலைகளில் அதிபர்களது வழிகாட்டலில் மாணவர்கள் கல்வியில் சாதனை செய்பவர்களாகவும் இருப்பதையும் அறியமுடிகிறது
கடந்தகால ஆட்சியாளர்களது தவறான நடவடிக்கைகளால் ஏற்பட்ட கல்வி உட்பட பொருளாதார நெருக்கடிகளுக்கு மக்கள் ஆளாக வேண்டியேற்பட்டு அது இன்றும் தொடர்கின்றன. இதில் முக்கியமாக கடந்தகால கொவிட் நிலைமையில் இறந்த முஸ்லிம் சடலங்களை இரக்கமின்றி எரித்து முஸ்லிம்களைப் புண்படுத்திய சாபம் அந்த ஆட்சியாளர்களை போராட்டக்காரர்களைக்கொண்டு விரட்டியடிக்க வைத்தது. இது ஆட்சியாளர்களுக்கு ஒரு படிப்பினை எனலாம். எனவே சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை ஆட்சியிளர்கள் மதிக்க வேண்டும்.
இன்றைய அரசின் செயற்பாடுகள் என்பன திருப்திபடுவதற்கில்லை. இந்த அரசு சொல்தொன்று செய்வது வேறொன்று அதற்கு துணைபோவோருமுண்டு அவர்களனைவரும் நன்றாக உள்ளனர். எனினும் கஷ்டப்படுவது மக்களே இதுகுறித்து பாராளுமன்றிலும் குரலெழுப்பி வருகிறோம்.
இந்நிலைமை மாறவேண்டும் இந்நாட்டின் கல்வித்துறை உட்பட பொருளாதார முறை என்பன சீரடைத்து மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடையச்செய்ய ஏற்ற சிறந்த திட்டங்கள் எம்மிடமுண்டு. அவற்றைச் செயல்படுத்த நடைபெறவுள்ள தேர்தலின்போது எமக்கு மக்கள் தக்க வாய்ப்பை ஏற்படுத்துவார்களென நம்புகிறோம்… என்றார்