கட்சி கிளைகள் புனரமைக்கும் வேலைத்திட்டத்தினை எதிர்வரும் ஏப்ரலுக்குள் நிறைவு செய்யவும்.. -மு.கா. தலைவர் ஹக்கீம் பணிப்பு
அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைக்கும் வேலைத்திட்டத்தினை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவு செய்யுமாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைப்புக்குழுவைப் பணித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைகள் புனரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான விஷேட கூட்டம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் (25) கண்டியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதர், பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள 226 கிராம சேவகர் பிரிவுகளில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளும் கட்சி கிளை, இளைஞர் கிளை, மகளிர் கிளை புனரமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்மாந்துறை தொகுதியில் 216 கட்சி கிளைகளும், பொத்துவில் தொகுதியில் 321 கட்சி கிளைகளும், கல்முனை தொகுதியில் 141 கட்சி கிளைகளும் என மொத்தமாக 678 கிளைகள் புனரமைக்கப்படவுள்ளன எனவும், இதில் சம்மாந்துறை தொகுதியில் 37 கட்சி கிளைகளும், பொத்துவில் தொகுதியில் 52 கட்சி கிளைகளும், கல்முனை தொகுதியில் 35 கட்சி கிளைகளும் என மொத்தமாக 124 கிளைகள் மாத்திரம் இதுவரை புனரமைக்கப்பட்டுள்ளன.மிகுதியாகப் புனரமைக்கப்படவுள்ள 554 கிளைகள் புனரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதி தேசிய அமைப்பாளர் எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் இதுவரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைப்பு வேலைத்திட்டம் நிறைவுபெற்ற கிராமங்களில் விரைவில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினால் மத்திய குழுக்கள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)