இலங்கை ரி20 அணியின் தலைவராக வனிந்துவுக்கு பதில் அசலங்க நியமனம்..!
பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக இடது கை துடுப்பாட்ட வீரரான சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி கிரிக்கெட் சுற்றுப்பயணம் பங்களாதேஷ் சென்று 3 போட்டிகள் கொண்ட ரி20, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் ம்ற்றும் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆகிய முழுமையான தொடரில் விளையாடவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 4ஆம் , 6ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் ரி20 போட்டிகள் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான ரி20 போட்டியில் நடுவரான ஹனிபாலின் தீர்ப்புக்கு எதிராக பொது வெளியில் நடுவரை விமர்சித்தமைக்காக சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை அணியின் தலைவரான வனிந்து ஹசரங்கவுக்கு இரண்டு சர்வதேச போட்டிகளில் தடை விதித்ததுடன் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதித்தது.
இதன் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் இரு போட்டிகளிலும் வனிந்து ஹசரங்க விளையாட முடியாதமையால் அவருக்கு பதிலாக இலங்கை ரி20 அணியின் தலைவராக உப தலைவராக செயற்பட்ட இடது கை மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரும் பகுதி நேர சுழல்பந்து வீச்சாளருமான சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் இன்று அறிவித்தது.
அத்துடன் வனிந்து ஹசரங்கவுக்கு பதிலாக மற்றுமொரு சகலதுறை வீரரான ஜெப்ரி வெண்டர்சே அணியில் உள்ளவாங்கப்பட்டுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 ரி20 போட்டியில் உபாதைக்கு உள்ளான ஆரம்ப வீரரான பெத்தும் நிசங்கவுக்கு பதிலாக மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்ணான்டோவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)