கொத்தணி பாடசாலை முறையை ஏற்படுத்த கல்வி அமைச்சு முடிவு..
பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் கல்வி அமைச்சு கொத்தணி பாடசாலை முறையை அறிமுகப்படுத்தவுள்ளது.
8 பாடசாலைகளை உள்ளடக்கி கொத்தணி பாடசாலை முறை அறிமுகப்படுத்தப்படுமென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.பிரதேசத்தின் முன்னணி பாடசாலை ஒன்றின் அதிபர் இக்கொத்தணி பாடசாலைகளின் பிரதம இணைப்பாளராக பணிபுரிவார்.
பாடசாலைகள் எதிர்நோக்கும் ஆசிரியர் பிரச்சினை ,கட்டிட பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் இக்கொத்தணி பாடசாலைகள் அமைக்கப்பட உள்ளது. 220 பாடசாலைகள் பிரதான பாடசாலைகளாக தெரிவு செய்யப்படும் அதேவேளை வலயக் கல்வி பணிப்பாளர் கொத்தணி பாடசாலைகளை தெரிவு செய்வார்.
இது தொடர்பான இறுதி தீர்மானங்கள் எடுப்பதற்காக கல்வி அமைச்சர் மாகாண ஆளுநர்களையும் மாகாண பிரதம செயலாளர்களையும் இவ்வாரத்தில் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.