இலங்கை கிரிக்கெட்டை ஆளப்போகும் லங்கா..! T10 டிசம்பரில் ஆரம்பம்..!
லங்கா T10 கிரிக்கெட் லீக்கின் முதலாவது பருவகால தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இலங்கையின் முன்னணி சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் இடம் பெறும் என T10 க்ளோபல் ஸ்போர்ட்ஸ் இன்று அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதியுடன் இந் தொடர் இடம்பெறவுள்ளதுடன், இத் தொடர் கடந்த 2023 ஆம் ஆண்டு நடாத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும் அத் தொடர் இவ்வருடம் டிசம்பர் மாதம் வெற்றிகரமாக இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.
முதல் அத்தியாயத்தை ஆரம்பிக்க இருக்கும் T10 லீக் தொடரானது அதிரடிக்குப் பஞ்சமில்லாத கிரிக்கெட் தொடராக அமையவிருக்கிறது. அத்துடன் இலங்கையின் அதிரடி கிரிக்கெட் நட்சத்திரங்களுடன் உலகின் முன்னணி நட்சத்திரங்களும் இணைய இருக்கிறார்கள். அத்துடன் இலங்கையின் இளம் வீரர்கள் சர்வதேச வீரர்களுடன் இணைந்து விளையாடி தமது அனுபவங்களையும் திறமைகளையும் அதிகப்படுத்த சிறந்த தளமாக இது காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகையில் “இந்த T10 தொடரானது ஒரு மகத்தான வெற்றியாக அமையும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது இலங்கை கிரிக்கெட்டின் விளையாட்டில் வளர்ந்து வரும் போக்குகளுடன் தொடர்ந்து நிலைத்து நிற்கும் திறனுக்கு பங்களிக்கும்.” என்றார்.
லங்கா T10 தொடர் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவரான ஷம்மி சில்வா குறிப்பிடுகையில் “இந்த நிகழ்வு கிரிக்கெட் ஆர்வலர்களை மட்டும் கவராமல், போட்டியை பரவலாக பிரபலப்படுத்துவதற்கு ஒரு ஊக்கியாக அமையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.
அத்துடன் இத் தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளதுடன் இலங்கையின் முக்கிய நகரங்களை மையப்படுத்தி அணிகளின் பெயர்கள் சூட்டப்படவுள்ளது. அத்துடன் ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 16 வீரர்கள் இடம்பெறவுள்ளதுடன் அதில் 6 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்போட்டிகள் அனைத்தும் இரவுப் போட்டிகளாக மின்னொளியில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)