நியூஸிலாந்துக்கு எதிராக ரி20 தொடரை வழித்துத் துடைத்தது அவுஸ்திரேலியா
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான 3ஆவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறையில் 27 ஓட்டங்களால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரை 3:0 என வழித்துத் துடைத்தது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் முதல் இரு போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் 3ஆவதும் இறுதியுடான போட்டி இன்று ஒக்லன்டில் இடம்பெற்றது. போட்டியின் நாணயச்சுழற்சிளில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடக் களம் நுழைந்த அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப வீரரான ட்ரவேஸ் ஹெட் சிற்ப்பான ஆரம்பத்தைக் கொடுத்து 33 ஓட்டங்களுடன் வெளியேறினார். 3ஆம் இலக்கத்தில் வந்த மெத்யுவ் சோர்ட் 27 ஓட்டங்களையும், மெக்ஸ்வெல் 20 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க அவுஸ்திரேலிய அணி 10.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றிருக்க போட்டியை மழை பாதித்தது. இதனால் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் நிறுத்தப்பட்டு டக்வேர்த் லூயிஸ் முறையில் நியூஸிலாந்து அணிக்கு 10 ஓவர்களில் 126 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் கடினமான வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த நியூஸிலாந்து அணிக்கு கிளேன் பிலிப்ஸ் மாத்திரம் அதிரடியாக 40 ஓட்டங்களைப் பெற்று களத்திலிருக்க மற்யை வீரர்களில் சப்மேன் 17 மற்றும் வில் யங் 14 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த போதிலும் நியூஸிலாந்து அணியால் 10 ஒவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இதனால் அவுஸ்திரேலிய டக்வேர்த் லூயிஸ் முறையில் 27 ஓட்டங்களால் வெற்றி பெற்று ரி20 தொடரை 3:0 என வழித்துத் துடைத்தது. போட்டித் தொடரின் நாயகனாக அவுஸ்திரேலிய அணியின் தலைவரான மிச்சல் மார்ஸ் தெரிவானார்.
(அரபாத் பஹர்தீன்)