கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் வித்தியாரம்ப விழா..!
கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் தரம் 01 இற்கு மாணவர்களை உள் வாங்கும் விஷேட நிகழ்வு நேற்று வெகு விமரிசையாக இடம்பெற்றது.
நேற்றைய தினம் 2024ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை உள்ளீர்க்கும் வித்தியாரம்ப நிகழ்வு நாடு பூராகவும் இடம்பெற்றிருந்தது. அந்தவகையில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் பிரதி அதிபராகளான ஜனாப் எம். நஸ்ரின் மற்றும் திருமதி எஸ். சஜினாஸ் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
முதலாம் தரத்துக்கு அனுமதிக்கப்பட்ட 120 மாணவர்கள் அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பேண்ட் இசைக்குழுவின் வாத்திய இசையோடு பாடசாலையின் பிரதான வாயிலில் இருந்து தரம் 2 மாணவர்கள் மலர் தூவி நடைபவணியாக ஆரம்பப் பிரிவு முன்றலுக்கு அழைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து பாடசாலையின் பிரதி அதிபர் எம். நஸ்ரின் உரையாற்றுகையில் ” இன்றைய நாள் பிள்ளைகளின் எதிர்காலக் கல்விப் பயணத்தின் ஆரம்ப நாளாகும். மாணவச் செல்வங்களின் உறவுப்பாலத்தைக் கட்டியெழுபுவதோடு, பல்வேறு சமூகச் சூழலில் இருந்து வரும் மாணவர்களை தனித்துவமான, நேரிய சிந்தனை கொண்ட மாணவர்களாக மாற்ற வேண்டிய கடமை பாடசாலையின் முக்கிய கருப்பொருளாகும். இதனை நாம் முற்கொண்டு செல்வதற்கு பெற்றோர்களாகிய நீங்கள் முழுமையான ஒத்துளைப்பினை வழங்க வேண்டும். பாடசாலை சமூகம் என்பது வெறுமனே ஆசிரியர்கள் மாத்திரமல்ல, பெற்றோர்கள், பாடசாலை வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யும் பழைய மாணவர், குறிப்பாக பாடசாலை பெற்றோர் அபிவிருத்தி சங்கம் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கிறபோதுதான் நாங்கள் எதிர்பார்க்கும் அடைவுமட்டத்தே நோக்கிப் பயணிக்கலாம். எனவே பெற்றோர்களாகிய நீங்கள் பிள்ளைகள் மீது இன்றிலிருந்து கரிசனையோடு செயற்படுவதோடு, பாடசாலைக்கும் தங்களுக்குமான உறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.” என்றார்.
இவ் வித்தியாரம்பம் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பகுதிப் பொறுப்பாசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)