உள்நாடு

கிழக்கு மாகாண முஸ்லிம் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவது ஆளுநரின் கவனயீனமா? இனவாத நோக்கமா? -கிழக்கின் கேடயம் எஸ்.எம். சபீஸ் கேள்வியெழுப்புகிறார்..

கிழக்கு மாகாணத்தில் ஆளுநர், பிரதம செயலாளர், 05 அமைச்சுக்களின் செயலாளர்கள் என முக்கிய 7 பதவிகள் இருக்கின்றன. காலாகாலமாக இப்பதவிகள் இனப்பரம்பலுக்கு ஏற்ப பங்கீடுகள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆளுநர் சிங்கள இன சகோதரர் நியமிக்கப்டுகின்ற வேளையில் ஏனைய பதவிகளுக்கு முறையே 3 முஸ்லிம் அதிகாரிகள், 2 தமிழ், 1சிங்கள இன சகோதர அதிகாரிகள் நியமிக்கப்படுவது தார்மீகம். இது இம்முறை முற்றாக மீறப்பட்டுள்ளது என கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கறைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.
கிழக்கின் கேடயம் சார்பில் அவர் வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையில் மேலும் அவர்,
கிழக்கு மாகாண முஸ்லிம் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் எமது அரசியல் தலைவர்கள் எடுத்துக் கூறாமை அல்லது ஆளுநர் வரலாறுகளை அறிந்து கொள்ளாமை அல்லது இனப்பற்றில் சுயத்தை இழந்தமை என கூறலாம். 200 வருடங்கள் இந்நாட்டில் பெரும் கஸ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்த மக்களுக்கு வாக்குரிமையை பெற்று கொடுத்தார் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள். அதன்பின்னர் இன்று வரை அந்த மக்கள் முழுமையான வாழ்க்கைச் சுட்டெண்ணுக்கு அருகிலும் வரவில்லை. இவ்வாறான ஒரு சமூகத்தில் இருந்து ஆளுநர் பதவியை பெற்றுக்கொண்ட செந்தில் தொண்டமான் அவர்கள் எவ்வளவு கவனமாக நடந்திருக்க வேண்டும்.
அரசியல் பழிவாங்கல் நடைபெறும் மாகாணத்தில் தனது நடவடிக்கைகள் மூலம் இவ்வாறு தான் மக்கள் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்ற முன்மாதிரியை காட்டியிருக்க வேண்டும் அது நடைபெறவில்லை என்பது வேதனையாகும். இன்னும் காலம் தாழ்ந்து போகவில்லை விரைந்து செயற்பட்டு தவறுகளை திருத்தி சிறந்த ஆளுநர் என்பதை செய்து காட்டுங்கள். மீண்டும் இதே தவறு நடைபெறும் என்றால் கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் நிறுவனங்கள் அமைப்பிடம் முறையிடுவோம். அங்கே எங்களது மக்களை உங்களின் கூட்டங்களை புறக்கணிக்க தீர்மானம் மேற்கொள்ள வேண்டுவோம் என தனது ஊடக அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *