இலகு வெற்றியுடன் கிவிக்கு எதிராக தொடரை வென்றது ஆஸி..!
நியூஸிலாந்து அணிக்கு எதிரான தீர்மானமிக்க 2ஆவது இருபதுக்கு இருபது போட்டியில் சகலதுறையில் பிரகாசித்த அவுஸ்திரேலிய அணி 72 ஓட்டங்களால் மிக இலகுவான வெற்றியை பதிவு செய்து தொடரை தனதாக்கியது.
நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டியில் 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி 1:0 என தொடரில் முன்னிலை பெற்றது.
அதற்கமைய இன்று ஒக்லெண்டில் இடம்பெற்ற தீர்மானமிக்க 2ஆவது போட்டியின் டொஸ்ஸில் வென்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. இதற்கமைவாக முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப வீரரான ஹெட் 45 ஓட்டங்களையும், அணித்தலைவர் மிச்சல் மார்ஸ் 26 ஓட்டங்களையும் பின்வரிசையில் வந்த பெட் கமின்ஸ் 28 ஓட்டங்களையும் அடித்துக் கொடுக்க 19.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் தொக்கி பேர்கிஸன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் சவாலான 175 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த நியூஸிலாந்து அணி அடம் சம்பாவின் சுழலில் சரணடைந்தது. நியூஸிலாந்து அணிக்கு பிலிப்ஸ் (42), கிலார்க்சன் (10) மற்றும் ட்ரென்ட் போல்ட் (16) ஆகிய மூவர் மாத்திரம் இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றனர். ஏனைய அனைவரும் ஒற்றை இலக்கத்துடன் நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து அணியால் 17 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்து 102 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்து. இதனால் 72 ஓட்டங்களால் மிக இலகு வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலிய அணி தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க 2:0 என தொடரை தனதாக்கியது. பந்துவீச்சில் அடம் சம்பா 4 விக்கெட்டுகளை அள்ளி எடுத்தார்.
(அரபாத் பஹர்தீன்)