தெல்தோட்டை முஸ்லிம் கொளனியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் வரலாற்றுத் தொகுப்பும் – 2024
‘முன்மாதிரி முஸ்லிம் கிராமம் 2040’ இலக்கு நோக்கிப் பயணிக்கும் தெல்தோட்டை முஸ்லிம் கொளனி, அல் இலாஹிய்யா ஜும்ஆ மஸ்ஜித் கௌரவ நம்பிக்கையாளர் சபை, வருடாந்தம் நடாத்தி வரும் கல்வியிலே உயர் நிலையை அடையும் மாணவர்களைப் பாராட்டி, பரிசு வழங்கி, கௌரவிக்கும் நிகழ்வும் தெல்தோட்டைப் பிரதேசத்தில் ஆகக்கூடுதலான முஸ்லிம்கள் வாழும் முஸ்லிம் குடியேற்றத்தின் வரலாறு தொகுக்கப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி காலை 9.00 மணி முதல் இலாஹிய்யா விழா மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற உள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளருமான லாபிர் ஹாஜியார் அவர்களும், கௌரவ அதிதியாக பிளேஸ் லைன் கார்கோ பிறைவேட் லிமிட்டட்டின் உரிமையாளர் அல்ஹாஜ் M.H.M. நஸீர் மற்றும் அந்நூர் நிறுவனத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் S.M. அலியார் அவர்களும், சிறப்பு அதிதிகளாக இலங்கை ஜம்யிய்யத்துல் உலமா சபையின் தெல்தோட்டைக் கிளைத் தலைவரும் காதி நீதவானுமாகிய அல்ஹாஜ் H.M.M. இல்யாஸ் மௌலவி அவர்களும்இ தெல்தோட்டை மஸ்ஜிதுகள் தைக்கிய்யாக்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் முனீர் சாதிக் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதன்போது ஊரிலிலிருந்து இவ்வருடம் பல்வேறு பீடங்களுக்கும் நுழையும் பல்கலைக்கழக மாணவர்கள், உயர் தொழிநுட்பக் கல்லூரிகளுக்குள் நுழையும் மாணவர்கள், கல்வியியற் கல்லூரிக்குள் நுழையும் மாணவர்கள், பட்டதாரியாக வெளியேறிய மாணவர்கள், க.பொ.த. சாதாரண தரத்தில் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், மௌலவி அல் ஹாபிழ் பட்டம் பெற்றவர்கள், சிறந்த கிரிக்கட் வர்ணணையாளர்கள் என பலதரப்பட்ட தகைமைகளைக் கொண்ட மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
அத்தோடு தெல்தோட்டைப் பிரதேசத்தில் ஆகக்கூடுதலான முஸ்லிம்கள் வாழும் முஸ்லிம் குடியேற்றத்தின் வரலாறு தொகுக்கப்பட்ட நூலும் இந்த தினத்தில் வெளியிடப்படவுள்ள முக்கிய நிகழ்வாகும்.
இந்நூலில் ஊரின் முதல் அதிபர், முதல் அரசியல்வாதி, முதல் ஆசிரியர், முதல் காதி நீதவான், முதல் பேஷ் இமாம், முதல் அஷ்ஹரி போன்றவர்களின் வரலாற்றுக் குறிப்புகளும் ஊரில் இயங்கிக் கொண்டிருக்கின்ற சமூகப்பணி செய்து கொண்டிருக்கும் அமைப்புகளின் தோற்றம் வளர்ச்சி என பல்வேறு கதம்ப விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எமது ஊரிலுள்ள ஆசிரியர்கள், உலமாக்கள், ஏனைய அமைச்சுகளின் கீழ் அரச தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் போன்றவர்களின் தகவல்களும் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
தெல்தோட்டை மண்ணில் இடம்பெறும் இவ்வரலாற்று நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் விழா ஏற்பாட்டுக் குழு கேட்டுக் கொள்கின்றது.
(விழா ஏற்பாட்டுக் குழு)