வொலிவேரியன் எம்.எஸ். காரியப்பர் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்..!
ஏ. ஆர். எம். மன்சூர் பௌண்டேசன் அமைப்பின் தலைவரான சட்டத்தரணி மரியம் மன்சூர் நளிமுடீன் சாய்ந்தமருது கமு/கமு/எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்திற்கு (20) செவ்வாயன்று விஜயத்தினை மேற்கொண்டு தெரிவு செய்யப்பட்ட 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தார்.
பாடசாலையின் அதிபர் எம். எஸ். எம். ஆரிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைப்பின் தலைவரான சட்டத்தரணி மரியம் மன்சூர் நளிமுடீன், அவரது கணவர் வைத்தியர் நளிமுடீன், அமைப்பின் செயலாளர் நிப்றாஸ் மன்சூர் மற்றும் அவ் அமைப்பின் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
பாடசாலை முற்றத்திலிருந்து வரவேற்ற அதிபர். பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவரையும் மிகவும் விருப்புடனும், இன்முகத்துடனும் நலன் விசாரித்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, அதிபர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வு கிராத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வேளை பாடசாலை அதிபரால் ஆற்றப்பட்ட வரவேற்புரையில், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். எம். மன்சூரின் அளப்பரிய சேவைகள் அச்சொட்டாக நாளைய தலைவர்களான இளைய மாணவச் சமுதாயத்திற்கு தெளிவுபடுத்தியதுடன் அச்சேவைகளை அன்னாரது மகளான சட்டத்தரணி மரியம் மன்சூர் நளிமுடீன் செய்து கொண்டிருப்பதையிட்டு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
அடுத்ததாக சட்டத்தரணி மரியம் மன்சூர் நளிமுடீன் உரையாற்றிய போது, தனது தாயாரினது தகப்பனாரின் பெயரைத்தாங்கிய இப் பாடசாலைக்கும் மாணவச் செல்வங்களுக்கும் உதவி செய்யக்கிடைத்ததையிட்டு அகமகிழ்வதாகக் கூறினார். அத்தோடு, தனது தந்தை போன்ற கறைபடியாத கரங்களினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை இனிதே உவந்தளித்தார்.
இதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபர், ஆசிரியர்களினால் பாடசாலையின் தலைமை நுழைவாயில் தொடர்பான மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது. பிரதி அதிபர் எம். எப். சித்தி சர்ஜுனாவினால் நன்றி உரை வழங்கப்பட்டதுடன், ஸலவாத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
இதன் பின்னர் கமு/கமு/எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய நிர்வாகக் குழுவினால் திட்டமிடப்பட்டிருந்த பாடசாலையின் தலைமை நுழைவாயில் அமையப்பெற வேண்டிய இடத்தினையும் பார்வையிட்டதுடன் அதனை நிச்சயமாக செய்துதருவதாக வாக்குறுதியும் வழங்கினார். எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். எம். மன்சூரின் நினைவு நாளை முன்னிட்டு துஆப் பிரார்த்தனை நிகழ்வொன்றினை இப் பாடசாலையில் நடாத்த வேண்டுமென்ற விருப்பத்தினையும் தெரிவித்தார்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)