பிரியாதிருக்க இரு இனங்களைத் தமிழால் ஒருங்கிணைத்த முன்னோடி நிகழ்வு..!
“சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னிருந்த நிலையை இன்று இங்கு நான் காண்கின்றேன்” நேற்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் நூல்களின் வெளியீட்டு விழாவில் தலைமை தாங்கிப் பேசுகையில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் க.இரகுபரன் அவர்கள் இனபேதமற்று ஒரேமொழிபேசும் இந்துக்களும், முஸ்லிம்களும் நிறைந்த அவையில் இதனைக் குறிப்பிட்டார். இனங்களை கடந்த நிலையில் மொழிதமிழால் இணைந்த அன்பு இதயங்களாய் காத்திரமான இலக்கிய ஆளுமைகள் வரவுதந்த சிறப்பை 18.02.2024 கொழும்பு தமிழ்ச்சங்க வினோதன் மண்டபத்தில் அமைதியான அழகான நூல்வெளியீடு நடந்தேறியது.
சிவாகம கலாநிதி. வைத்தீஸ்வரக் குருக்களின் ஆசியுரையுடன் தொடங்கிய இவ்விழாவிற்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பேசுகையில். ”இன்று பல்துறையிலும் சிறந்து விளங்கும் இஸ்லாமியர்கள், தமது தாய்மொழி தமிழைக் காப்பதிலும் முதன்மை பெறுவதை நான் காண்கின்றேன்” எனவும் விதந்துரைத்தார். நூலாசிரியரின் பேத்தி செல்வி நதீதா ஸமா ஸமத் வரவேற்புரை செய்ய தலைவர் உரையின்பின் எழுத்தாளர் திருமதி வசந்தி தயாபரன் அவர்கள் தொடக்க உரையையும், தமிழ்மாமணி அல்அசூமத் நூல் அறிமுகமும் செய்தனர்.
இன்றைய காலகட்டத்தில் கவிதையை எழுதுபவர்கள் எந்த பயபக்தியுமில்லாமல் கவிதை எழுதத்துணிகின்றனர். அவர்கள் தாம் எழுதுவதெல்லாம் கவிதை என இந்த சமூகம் ஏற்க வேண்டும் என விரும்புகிறார்கள். கவிதை எல்லோராலும் எழுதப்பட முடியாது.
அதற்கென்ற முறையோடும் மரபோடும் எழுதப்பட வேண்டும். என தனது உணர்வுகளை இச்சமூகத்திற்கு வலியுறுத்தி கூறியதோடு காப்பியக்கோ ஜின்னா ஷரிபுதீன் அவர்களுடைய ஆழமான கவியாக்க வெளிப்பாடுகளை பற்றியும் உரையிலே சிறப்பித்திருந்தார். செல்வி தேஜஸ்வினி பிரணவன் நிகழ்வை அழகாக தொகுத்து வழங்கினார். நிறையவே கலை இலக்கிய நண்பர்கள் இந்நிகழ்வில் பங்குகொண்டு சிறப்பித்தனர்.
(அஷ்ரப் ஏ சமட்)