உள்நாடு

“மலையகத் தமிழர்” எனப் பெயர் சூட்ட அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. -நுவரெலியாவில் இன்று கோரிக்கை ஏற்புப் போராட்டம்..!

இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களாக நாமம் சூட்டி வாழ்ந்து வரும் மலையகத் தமிழ் மக்களை, தற்பொழுது பதிவு செய்யப்பட்டு வரும் குடிசன மதிப்பீட்டில், “மலையகத் தமிழர்” எனப் பெயர் சூட்ட அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து, கண்டி சமூக அபிவிருத்தித் தாபனம் மற்றும் தோட்ட, கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் ஆகியவை இணைந்து, நுவரெலியா மாநகரில் கோரிக்கை ஏற்புப் போராட்டம் ஒன்றை, (20) செவ்வாய்க்கிழமை காலை முன்னெடுத்தனர்.
இந்தப் போராட்டத்தில், 250 க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு, மும் மொழிகளிலும் தமது கோரிக்கைகளை எழுதிய பதாதைகளை ஏந்தி, கோஷமிட்டுப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன் போது, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்”, “எமது அடையாளம் மலையகத் தமிழர்”,
“வீட்டுரிமை வேண்டும் காணி உரிமை வேண்டும்”, “தவிர்க்காதே தவிர்க்காதே தமிழ் மொழியைத் தவிர்க்காதே”, “தோட்ட வைத்தியசாலைகளைத் தரம் உயர்த்து”, “பாகுபாடு காட்டாதே” எனும் வசனங்களை எழுதி கோஷங்களையும் எழுப்பினர்.
அத்துடன், மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சகல அரச ஆவணங்களிலும்
“இந்தியா வம்சாவளி” என நாமம் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட உள்ள குடிசன மதிப்பீட்டு நிரப்பப்படும் படிவத்தில், “இந்தியா வம்சாவளி” என்ற அடையாளத்தை மாற்றி, “மலையகத் தமிழர்” என்ற பதம் உள்ளீர்க்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில், குடிசன மதிப்பீட்டு பத்திரத்தில் “மலையகத் தமிழர்” என்று பதிவு செய்ய வேண்டுமென்பதே எமது முக்கிய கோரிக்கையாகும்.
இன்று பெப்ரவரி (20.02.2024) “உலக சமூக நீதி” தினமாகும். இன்று “மலையகத் தமிழர்” என்ற இனக் குழுவை குடிசன கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கையில், கண்டி சமூக அபிவிருத்தித் தாபனம் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு கோரிக்கைப் போராட்டத்தை, நுவரெலியாவில் முன்னெடுத்துள்ளது என, போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த சமூக அபிவிருத்தித் தாபன நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் யோகேஸ்வரி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் முடிவில், பத்துப் பேர் அடங்கிய குழுவினர், நுவரெலியா மாவட்ட செயலகத்திற்குச் சென்று “தமது கோரிக்கையை அரசு ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, பெறப்பட்ட கையொப்பங்கள் அடங்கிய மனு ஒன்றும், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) டி.கே. கவிசேகரவிடம் கையளித்தனர்.
அதேவேளை, நகரத்திற்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *