இருபதுக்கு இருபதில் வனிந்து ஹசரங்க நூறு
இலங்கை இருபதுக்கு இருபது அணியின் தற்போதைய தலைவரும், நட்சத்திர சுழல்பந்து வீச்சாளருமான வனிந்து ஹசரங்க சர்வதேச ரி20 அரங்கில் தனது 100ஆவது விக்கெட்டை நேற்றைய தினம் (19) கைப்பற்றினார்.
26 வயதான வலது கை லெக் ப்ரேக் பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்க சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் தற்சமயம் 3ஆம் இடத்தில் உள்ளார். மேலும், இலங்கை அணியின் புதிய ரி20 தலைவராகவும் பணியாற்றுகிறார். இந்நிலையில், நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெற்ற 2ஆவது ரி20 போட்டியில் நஜிபுல்லாஹ் சத்ரானை போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்த வனிந்து ஹசரங்க சர்வதேச ரி20 அரங்கில் தனது 100ஆவது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் ரி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரராகவும், உலக அளவில் 11 ஆவது வீரராகவும் பதிவாகினார் . இதற்கு முன்னர் இலங்கை சார்பில் லசித் மாலிங்க இச் சாதனையை படைத்திருந்தார்.
மேலும், இதுவரையில் 63 சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள வனிந்து ஹசரங்க 101 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். அத்துடன் அவரது சிறந்த பந்துவீச்சு பிரதியாக கடந்த மாதம் சிம்பாப்வே அணிக்கு எதிராக 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை பதிவாகியுள்ளது. அணித்தலைவராக பொறுப்பேற்றதன் பின்னர் இதுவரையில் 5 போட்டிகளில் 10 விக்கெட்டுக்களை வனிந்து ஹசரங்க அள்ளிச் சுருட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)