உள்நாடு

தமது பிள்ளையை தரம் ஒன்றில் சேர்க்க  ரூ. 20,000 ற்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்யும்  நிர்ப்பந்ததில் சபரகமுவ மாகாணப் பெற்றோர்கள்..!

இலங்கையில் தரம் ஒன்றிலிருந்து பல்கலைக்கழகம் வரை   இலவச கல்வியை வழங்குவதாக அரசு அறிவித்துள்ள போதிலும் அரச பாடசாலைகளில் தரம் ஒன்றில் தமது பிள்ளைகளை சேர்க்க   பெற்றோர்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாவிற்கு அப்பியாசப் புத்தகங்களையும்,   கற்றல் உபகரணங்களையும் கொள்வனவு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
சபரகமுவ மாகாணத்திலுள்ள ஒருசில தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் தரம் ஒன்றில் இணையும் ஒவ்வொரு மாணவனும் 250 ஏ4 கடதாசிகள்,உயர் தரத்தைக் கொண்ட பெரிய அளவிலான  நிறப் பென்சில் பெட்டிகள் நான்கு  மற்றும் நிரந்தர மாக்கர் பேனைகள் நான்கு உட்பட பல்வேறு வகையான கற்றல் உபகரணங்களையும் மாணவர்கள்  பாடசாலைகளில் இணையும் முதல் நாளிலேயே  ஒப்படைக்க வேண்டுமென பெற்றோர்களுக்கு கண்டிப்பான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களை சேர்ந்த  பெற்றோர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
மேற்படி பொருட்களை கொள்வனவு செய்ய சுமார் ரூபா இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தொகையை செலவிசெய்ய நேர்ந்துள்ளதாகவும் இப்பெற்றோர்கள் மேலும்  தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தரம் ஒன்றில் புதிதாக இணையும் மாணவர்கள் தமது பாடசாலைக்கு சமர்ப்பிக்க வேண்டிய புத்தகப் பட்டியல் தொடர்பில் ஒவ்வொரு பாடசாலையும் வித்தியாசமான  பட்டியல்களை வெளியிட்டுள்ளதால் தமது பிள்ளைகளுக்கு கிடைக்கப் பெறவுள்ள   கல்வியில் பாதிப்புக்கள் இடம் பெறுமா எனவும் மற்றும் சில பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தரம் ஒன்றிற்கு  மாணவர்கள் புதிதாக இணைக்கப்படும் போது பெருந்தொகையான அப்பியாசக் புத்தங்களையும் ஏனைய கற்றல் உபகரணங்களையும் பெற்றோர்கள் பாடசாலைக்கு வழங்கி வருகின்ற போதிலும் அவை அனைத்தும் வினைத்திறனான முறையில் பயன்படுத்த  பாடசாலை நிர்வாகங்களும் தரம் ஒன்று ஆசிரியர்களும் தவறிவருகின்றனர் எனவும் மேற்படி பெற்றோர்கள் மேலும்  குற்றம் சாட்டுகின்றனர்.
அத்துடன் தரம் ஒன்று  மற்றும் இரண்டில் படிக்கும்  மாணவர்கள் 48 தேர்ச்சிகளை நிறைவு செய்ய கடமைப்பட்டுள்ளனர்.மொழி,கணிதம்,சுற்றாடல் மற்றும் சமயம் உட்பட ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகளும் இம்மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.
எனினும் ஆங்கிலம்  சிங்களம் ஆகிய   இரு மொழிகளும் வாய்மொழி மூலமாக மாத்திரமே மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும் அதிகமான பாடசாலைகளில் மேற்படி இரண்டு மொழிகளிலும் தரம் ஒன்று மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருவது தவறான செயன்முறையென கல்வி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடிமிக்க சூழ்நிலையில் தரம் ஒன்றிற்கு இணையும் மாணவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் கற்றல் உபகரணங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள்  பாடசாலை அதிபர்களுக்கு பொருத்தமான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளை  வழங்க முன்வர வேண்டுமெனவும் மேற்படி பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *