உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள புதிய பாணியிலான போராட்டமொன்று அவசியமாகும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா
எமது நாட்டின் 76 வருடகால சாபக்கேட்டுக்கு முற்றுப்பள்ளி வைப்பதற்காக ஒட்டுமொத்த சக்திகளையும் ஒன்றுசேர்த்து வருகின்றவேளையில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று ரீதியாக பெண்களை ஒரு சக்தியாக சேர்த்துக்கொண்டது. பெண்கள் வெறுமனே வாக்குகளை அளிக்கின்ற ஒரு பிரிவினர் அல்ல, அரசாங்கங்களை அமைக்கின்ற, அந்த அரசாங்கங்களுடன் ஒன்றுசேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புகின்ற கௌரவமான ஒரு குழுவாகவே ஒன்றுசேர்ந்து வருகின்றனர்.
அவர்கள் தற்போது ஒரு வரலாற்று ரீதியான சக்தியாக இயங்கி வருகிறார்கள். இன்னும் ஏறக்குறைய எட்டு மாதங்களில் எமது யுகம் நிர்மாணிக்கப்படுகின்ற தொடக்க நிலையாக சனாதிபதி தேர்தல் வருகின்றது. சனாதிபதி தேர்தலை பிற்போடவோ தவிர்த்துப் பயணிக்கவோ முடியாது. அவ்வாறு தவிர்த்துப் பயணிக்க எவர் இடமளித்தாலும் நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். தவிர்த்துப் பயணிக்க முயற்சிசெய்தால் வீதியில் இறங்கி அவர்களை விரட்டியத்திட பெண்கள் ஒரே மூச்சுடன் முன்னணி வகிப்பர் என்பது திண்ணம்.
இயலாத நிலையிலும் ரணில் விக்கிரமசிங்கவும் சனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருவது புலனாகின்றது. பாராளுமன்ற அமர்வு நிறுத்தத்திற்குப் பின்னர் சபாநாயகரின் அக்கிராசனத்தில் அமர்ந்து உரை நிகழ்த்துவதை ரணில் விக்கிரமசிங்க விரும்புகிறார். பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்துகையில் 2048 இல் நாட்டைக் கட்டியெழுப்ப வாய்ப்பளிக்குமாறு கோரினார். ரணில் விக்கிரமசிங்கவின் பிரதம சீடரான வஜிர அபேவர்தன 2048 இல் நாடு சீரடைந்து, ஐரோப்பாவின் வெள்ளைக்காரப் பெண்கள் இங்கு மனைப்பெண்களாக சேவையாற்ற வருவார்களெனக் கூறினார்.
காணி உறுதிகளை வழங்குவதாகக் கூறி சனாதிபதி தேர்தலுக்கு வருவதற்காகவே நாடு பூராவிலும் உள்ளவர்களை தம்புல்லைக்கு திரட்டினார். மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் இங்கு ஆயிரக்கணக்கில் குழுமியிருப்பது உறுதிகளை பெற்றுக்கொள்வதற்காக அல்ல. நாட்டை வீழ்த்தியவர்களை விரட்டியடித்து நாட்டைக் கட்டியெழுப்ப தயாராகுங்கள் எனும் செய்தியைக் கொடுப்பதற்காகவே இங்கு வந்துள்ளார்கள். ஒரு பை அரிசியைக்கொடுத்தும் வாக்குகளை சேகரிக்க ரணில் முயற்சி செய்கிறார். அரிசிப் பைக்காக, தகரத் தகட்டுக்காக வாக்குகளை அளித்து அரசாங்கங்களை அமைத்த யுகம் முற்றுப்பெற்று விட்டதென்பதை நாங்கள் அவருக்கு கூறவேண்டும். இது ஒரு புது யுகம், திசைகாட்டியின் யுகம். அரிசியல்ல தங்கத்தை பகிர்ந்தளித்தாலும் இந்த நாட்டின் பெண்கள் திசைகாட்டியை வெற்றிபெறச் செய்விக்க தயார் எனும் முடிவினை எடுத்துவிட்டார்கள்.
எம்மெதிரில் நிலவுகின்ற சவால் கொஞ்ச நஞ்சமல்ல. நல்லதொன்று இருக்கின்ற இடத்திற்கு நல்லதொன்றைக் கொடுப்பது சிரமமான வேலையல்ல. தீய ஒன்று இருக்கின்ற இடத்திற்கு ஊக்கமுள்ள மனிதர்களால் மாத்திரமே நல்லதொன்றைக் கொடுக்கமுடியும். மிகவும் கெட்ட ஒரு நாட்டுக்குப் பதிலாக நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக பெண்கள் முண்டியத்துக் கொண்டிருக்கிறார்கள். உற்பத்தி வழிவகைகளை சீரழித்து, தொழில்முயற்சிகளை சீரழித்து, எமக்கு உயிர்வாழ்வதற்கான வருமான வழிவகைகளை ஈட்டிக்கொள்ளமுடியாத வங்குரோத்து அடையச்செய்வித்த ஒரு நாடுதான் இருக்கின்றது. கடன் வாங்கி, திருடித் தின்று, கடன் செலுத்த முடியாதென்பதை உலகம் கூறிய ஒரு நாட்டிலேயே நாங்கள் வசிக்கிறோம்.
1948 இல் சுதந்திரம் பெறும்போது ஆசியாவின் இரண்டாவது பலம்பொருந்திய பொருளாதாரம் நிலவிய நாட்டைத்தான் கடைசி இடத்திற்கு தள்ளியுள்ளார்கள். பலம்பொருந்திய உற்பத்திப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்புவதற்காக ஒட்டுமொத்த மக்களையும் தொடர்புபடுத்திக்கொண்ட பாரிய செயற்பொறுப்பு இருக்கின்றது. இன்றும்கூட ஏற்றுமதி பொருளாதாரத்தின் பெரும்பங்கினை வகிப்பது தேயிலை மற்றும் ஆடைத்தொழிற்றுறையைச் சேர்ந்த பெண்களாவர். வெளிநாட்டுத் தொழில்களிலிருந்து அதிகளவான டொலர்களை அனுப்பிவைப்பவர்கள் பெண்களே. எனினும் எவருமே பெண்களை பொருட்படுத்துவதில்லை.
பலம்பொருந்திய உற்பத்திப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பி ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்மைகளை வழங்குகின்ற வேலைத்திட்டமொன்றை நாங்கள் அமுலாக்குவோம். அதனூடக கல்விக்கு, சுகாதாரத்திற்கு போதியளவிலான பணத்தை ஒதுக்கி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். அதைப்போலவே அழுகிப்போன ஒரு சமூகத்திற்குப் பதிலாக மனிதம் நிலவுகின்ற சமூகமொன்றை உருவாக்கிட வேண்டும். அதற்காக மக்களின் செல்வத்தை மோசடியால் ஊழலால் திருடித் தின்றவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்குவோம்.
காசுக்காக பிள்ளைகளுக்கு போதைப்பொருள் விற்கின்ற ஒரு சமூகத்திலேயே நாங்கள் சீவிக்கிறோம். பெண்களை மதிக்காமல் அநியாயம் செய்கின்ற ஒரு நாடுதான் இருக்கின்றது. ஒருவரையொருவர் மதிக்காத எம்மெவருக்கும் உயிர்வாழ முடியாத ஒரு சமூகமே இருக்கின்றது. மொழிகளுக்கிடையில் முரண்பாடுகள், மதங்களுக்கிடையில் முரண்பாடுகள், உடுக்கின்ற உடைகளுக்கிடையில் நிலவுகின்ற முரண்பாடுகளுக்குப் பதிலாக ஒத்துணர்வும் மனிதமும் நிலவுகின்ற ஒரு நாடுதான் எமக்குத்தேவை. அன்பு நிலவுகின்ற ஒரு நாடுதான் எமக்குத் தேவை. பிள்ளைகள் மீது அன்பு செலுத்துகின்ற, பெண்களை மதிக்கின்ற, ஒத்துணர்வுள்ள சமூகமொன்றை நாங்கள் உருவாக்கிடவேண்டும். மிகவும் சாதகமான சமூகமொன்றை அமைத்திட நாங்கள் அனைவரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும்.
சுதந்திரம் எனக்கூறி கடலுக்கு பீரங்கி வேட்டுகளைத் தீர்த்து மீன்களை அச்சுறுத்தி தேசிய கோடியை ஏற்றிவிட்டோம் என்பதற்காக சுதந்திரம் இருக்கின்றதா? எமது நாட்டின் நிதிக்கொள்கையைத் தீர்மானிப்பது சர்வதேச நாணய நிதியமாகும். எமது நாட்டின் சுயாதீனத்தன்மை, எமது நாட்டின் உரிமை எமக்கில்லை. நாட்டு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதாகக்கூறி தம்புல்லைக்கு வரவழைப்பிக்கின்ற அதேவேளையில் அரசாங்கத்திற்குச் சொந்தமாக பாற்பண்ணைகளை அமூல் கம்பெனிக்கு விற்கிறார்கள். அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்புத் துறைமுகத்தின் முனையங்கள், எண்ணெய்க் குதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பெண்கள் மாநாட்டில் தெரிவித்தார் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா.