இங்கிலாந்தை சுருட்டிப் போட்ட இந்தியா, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது..!
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்களின் அசத்தல் ஆட்டத்தின் உதவியுடன் 434 ஓட்டங்களால் தமது சிறந்த டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி தொடரில் 2:1 என முன்னிலை பெற்றது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2ஆவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றிருக்க 3ஆவது போட்டி 15ஆம் திகதி ராஜ்கோட்டில் ஆரம்பமானது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 445 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் ரோஹித் சர்மா 131 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ஓட்டங்களையும், அறிமுக வீரரான சர்பராஸ்கான் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். மார்க்வூட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்ப வீரரான டக்கட்டின் 153 ஓட்டங்களின் துணையுடன் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 319 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் முஹம்மது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 126 ஓட்டங்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ஆரம்ப இளம் வீரரான யசஸ்வி ஜாய்ஸ்வால் அசத்தல் இரட்டைச் சதம் விளாசி ஆட்டமிழக்காமல் 214 ஓட்டங்களையும் , சுப்மன் கில் 91 ஓட்டங்களையும் , அறிமுக வீரர் சர்பராஸ்கான் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க 4 விக்கெட்டுக்களை இழந்து 430 ஓட்டங்களைப் பெற்றிருக்க இன்னிங்ஸை நிறைவு செய்தது இந்திய அணி.
இதனால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 557 என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அவ் அணியால் சகல விக்கட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் போர்க்ஸ் அதிகபட்ச 16 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுக்களை சாய்த்தார். இதனால் 434 ஓட்டங்களால் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது இந்திய அணி.
இதுவே இந்திய அணி அதிக ஓட்டங்களால் பெற்றுக் கொண்ட டெஸ்ட் வெற்றியாக பதியப்பட்டுள்ளமையும், இவ் வெற்றியுடன் 2:1 எ தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. போட்டியின் நாயகனாக சதம் மற்றும் 7 விக்கெட்டுக்களை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா தெரிவானார்.
(அரபாத் பஹர்தீன்)