கட்டுரை

வெற்றியின் இரகசியம் முயற்சி..! -பிரபல தொழிலதிபர். வெள்ளம் ஜீ. டாக்டர் எம்.ஜே. இக்பால்

இந்தியா தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வெள்ளம் ஜீ. டாக்டர் எம்.ஜே. இக்பால். இவர் தன்னை வெளியுலகத்துக்கு அடையாளப்படுத்த விரும்பாத பிரமுகராகவும், தனது கல்விப் பரப்பில் ஆரவாரமின்றி உச்சம் தொட்டு இன்று துபாய் நாட்டில் ‘மிட்சுபிஸி’ நிறுவனத்தின் பணிப்பாளராகவும், ஜப்பான் வரை விசாலித்திருக்கும் தனது நிறுவனத்தின் உச்ச அடைவைக் கண்டவருமாவார்.

அவர், அண்மையில் நிகழ்வொன்றுக்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த போது ‘உதயம்’ பத்திரிகைக்காக வழங்கிய நேர்காணல் இது:

கேள்வி: உங்களது இளவயது முயற்சியின் தூண்டுகோள் என்ன?

பதில்: எனக்கு, எப்போதுமே முயற்சியும், தியாகமும் ரொம்ப பிடித்ததாகும். எனது 22ஆவது வயதில் நான் பல்கலைக்கழகத்தில் MBA மேற்படிப்பு கற்றுக்கொண்டிருக்கும் போது Emirats Trading Agency இனால் தொழிலுக்கான நேர்முகத் தேர்வுக்கு கடிதம் கிடைத்தது.

அப்போது குறித்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டிருந்தேன். நூற்றுக் கணக்கோர் பங்கேற்ற அந்த தேர்வில் எனது நேரம் நெருங்கியதும் சான்றிதழ்கள், கல்வித் தகைமைகளை பார்த்துவிட்டு ‘உங்களுடைய தற்போதைய கல்வியளவு இப்பொழுது கொடுக்கப்படும் தொழிலுக்கு அதிக தகைமையாக உள்ளது. எனவே, நீங்கள் இவ் வேலையில் இணைவதாயின் இந் நிலையிலேயே உங்களை மட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்’ என்றார்கள். என்ன செய்வதென்று அறியாமல் திணறிவிட்டு, தீர்க்கமான முடிவின் பின்னர் துபாயிலுள்ள ஜப்பான் ‘மிட்சுபிஸி’ கம்பனியில் இணைந்து கொண்டேன்.

பின்னர் படிப்படியான விடா முயற்சியின் பலனாக 2007 இல் அதே நிறுவனத்தில் நிறைவேற்று அதிகாரியாகவும் பின்னர் 2011 இல் மத்திய கிழக்கு மற்றும் துபாயிலுள்ள நிறுவனத்துக்கு பணிப்பாளருமானேன்.

கேள்வி: பலமுறை இலங்கை விஜயம் செய்துள்ள உங்களின் தற்போதைய பயணத்தினூடாக இலங்கையில் நீங்கள் காணும் மாற்றங்கள் என்ன?

பதில்: இலங்கை உண்மையிலேயே ஒரு வளம் நிறைந்த பசுமையான அழகிய நாடு, இலங்கைக்கும் எமக்கும் எப்போதுமே நல்லுறவுகள் அதிகம். எமது பாட்டானார்கள் எல்லாம் இலங்கையில் வர்த்தகம் செய்துள்ளார்கள். பொதுவாக இலங்கையென்றாலே எமக்கு பெரும் சந்தோஷம்.

1993 இலிருந்து ஒவ்வொரு வருடமும் ஒருமுறையேனும் இலங்கை வருவேன். இடைப்பட்ட காலத்தில் கோவிட் – 19 கெடுபிடியினால் வெளிநாட்டு பயணங்களை குறைத்திருந்தேன். மீண்டும் பல நாட்களுக்குப் பிறகு இம்முறை வந்ததில் பல வித்தியாசங்களை உணரக் கூடியதாக உள்ளன.

அதாவது, இங்குள்ள வீதி அமைப்புக்கள், குறிப்பாக நெடுஞ்சாலை வீதிப் போக்குவரத்து மற்றும் புதிய புதிய ஹோட்டல்கள், விடுதிகள் என ஏராளமான அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளமையை பார்க்கும்போது மனது கலந்த மகிழ்ச்சி பொங்குகிறது.

இவ்வாறான அபிவிருத்திகள் 1993 ஆம் ஆண்டு முதல் தடவையாக வருகை தந்தமைக்கும் இப்போது 2024 ல் வருகைதந்துள்ளமைக்கும் பாரிய வித்தியாசங்களை உணரக்கூடியதாக அமைந்துள்ளது.

பொதுவாக எனது ஒவ்வொரு பயணத்தின் போதும் வெலிகம சென்று சங்கைமிகு கலீல் அவுன் மௌலானா அவர்களை தரிசிப்பது வழக்கம். அந்த சந்தர்ப்பத்தில் கொழும்பிலிருந்து வெலிகம செல்வதற்கு சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் தேவைப்படுகின்ற போதிலும் தற்போது இவ்வாறான வீதி அபிவிருத்திகளால் வெறும் ஒன்றரை மணி நேரத்தில் சென்று வரக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதென்பது சிறப்பானதொரு விடயமாகும்.

கேள்வி: சங்கைமிகு கலீல் அவுன் மௌலானாவின் நினைவாக இந்தப் பயணம் மேற்கொண்டதாக குறிப்பிட்டீர்கள் அவரைப் பற்றி கூற முடியுமா?

பதில்: நீங்கள் சங்கைமிகு அவுன் மௌலானா அவர்களைப் பற்றி கூறுங்கள் என்றால்;. ‘எனக்கு அவர் பற்றி தெரியாது’ என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் அந்தளவு பெரும் அறிவுஞானம் பெற்றவர். அதனால் கூறுகிறேன் அவரைப் பற்றி முழுமையாக சொல்லி முடிக்க முடியாது. இருந்தாலும் நான் அறிந்த பலவற்றின் அடிப்படையில் சிலதை கூறுகின்றேன்.

அவரின் சிறப்பு என்று சொல்லப் போனால், அவருடைய அறிவு என்னை பிரமிக்க வைக்கிறது. காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் என்னிடம் கூறினார். தமிழ் மொழியில் அவ்வளவு பெரிய ஆற்றலைக் கொண்டவர் அவுன் மௌலானா அவருடைய புலமை மறைவின் பின்னர்தான் தெரியவந்தது. அதற்கு அதை வெளியுலகில் காண்பித்து இப்படியானதொரு முத்தை அடையாளம் காணாமை எமது நாட்டின் துரதிஷ்டம் என்றுதான் கூற வேண்டும் என்றார்.

அது மாத்திரமல்லாமல் அவருடைய கற்கை நிலையத்தில் பல விடயங்களை பலருக்கும் சொல்லிக் கொடுத்துள்ளார்கள். இன்று அவர்களில் பலரும் பல துறைகளில்
சாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

அவருடைய வெண்பா கவி, சித்திரக் கவி, நாக பந்தம் இவைகள் உலகளவில் பேசப்படக்கூடிய தமிழ் புலமை வாய்ந்தவைகள். இவைகள் அவருடைய தமிழ் ஆளுமைகள்.

சங்கைக்குரிய அவுன் மௌலானா அவர்களைப் பற்றி சொல்வதானால், 1983 ம் ஆண்டிலிருந்து நான் அருடைய மாணவனாக இருக்கின்றேன். அவரிடம் எப்போது ஒரு மாணவனாக சேர்ந்தேனோ அன்றிலிருந்து என்னுடைய வாழ்வில் பல மாற்றங்களை நான் உணர்ந்தேன்.

அவர்களுடைய போதனை மிகப் பிரதானமானதும், எனக்கு ரொம்ப பிடித்ததும், நான் கடைப்பிடிப்பதும் என்னவென்றால்,
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பம் மீதும் அதிகம் நேசம் வைத்தல், நபியவர்கள் எதனையெல்லாம் சொல்லிக் கொடுத்தார்களோ அவற்றையெல்லாம் முறையாகச் செய்தல்.
அதற்கு பொதுவாக 5 விடயங்களை கடைப்பிடித்தல்,

1. ஐவேளை தொழுகையை முறையாக கடைப்பிடித்தல்.

2. சுபஹ் தொழுகையை விடாமல் தொழுது வரல்.

3. ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் குர்ஆன் ஓதுதல். குறைந்தது ஒரு ஐன் ஆவது ஓதுதல்.

4. ஒவ்வொரு மாதத்திலுமுள்ள முழு சந்திர நாளில் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் இணைத்து குர்ஆன், திக்ர் மஜ்லிஸ் நடாத்தல்.

5. மனிதன் எப்படி வாழவேண்டும். இதைத்தான் நபியவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதன் மனிதத்தன்மையாக வாழ்தல்.

– இவ்வாறு பல்வேறு அறிவாற்றல்களை கொண்டவர்தான் மர்ஹூம் சங்கைமிகு அவுன் மௌலானா அவர்கள்.

கேள்வி: தொழில் நிலைகளில் தங்களது முன்னேற்றங்களில் நீங்கள் கையாண்ட உத்திகள் யாவை?

பதில்: நான் எப்போதும் தொழில் கடமைகளின் போது, அதனை ஒரு வணக்கமாக எடுத்து, கண்ணியத்துடன் செய்ய ஆரம்பிப்பேன். அதுதான் வெற்றியின் இரகசியமாகவும் அமையும்.

ஒருவர் வைத்தியராக இருக்கட்டும் அல்லது வக்கீலாக இருக்கட்டும் அல்லது பொறியியலாளராகவோ அல்லது ஆசிரியராகவோ எதுவாக இருப்பினும் தன் தொழிலை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் செய்வதன் மூலமே வெற்றியின் உச்சத்தை தொட முடியும்.

அது மட்டுமல்ல வாழ்க்கையில் நேர முகாமைத்துவத்தை சரிவர செய்வதன் மூலம் மாத்திரமே வெற்றியின் அருகிலாவது செல்வது சாத்தியம்.
ஆகையால், உண்மை, நேர்மை, நம்பிக்கை, நேரமுகாமைத்துவம், மத அனுஷ்டானங்கள் இவைகள் எப்போதும் வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும்.

கேள்வி: இன்றைய இளைஞர்கள் தொழில் நிமித்தம் பல தடுமாற்றங்களை உணர்கிறார்கள் அவர்களுக்கு நீங்கள் கூற முனைவது என்ன?

பதில்: இது ஒரு நல்ல வினா! அதே நேரம் முக்கியமான விடயம். எப்போது ‘முடியாது’ என்கிற வார்த்தையை மனதில் எடுக்கிறோமோ அன்றுதான் தமது தோல்வி நிர்ணயிக்கப்படுகின்றது. அதாவது, அவர்கள் எப்போதும் அயாராது முயற்சிக்க வேண்டும். எந்தவொரு திறமையானாலும் அவற்றை சந்தேகிக்க கூடாது.

திறமைகளின் அளவை மட்டுப்படுத்தக் கூடாது. சவால்கள்தான் ஒரு மனிதனை நல்ல நிலைக்கு இட்டுச் செல்லும்.
இப்போதுள்ள சந்ததியினர் மிகவும் கவனக் குறைவானவர்களாகவே உள்ளனர்.

அவர்களது இலக்கு ஒருபுறமிருக்க நகர்வு இன்னொரு புறமிருக்கும். சுய தேடல் குறைந்தவர்களாக நகர்கின்றனர். இவைகளெல்லாம் சமூக ஊடகங்கள் மற்றும் இதர புதிய சாதனங்களில் பாவனைகளில் மூழ்குவதால் ஏற்படும் விளைவுகளாகும்.

எப்போது, சரியான இலக்குடனும், தூரநோக்கான சிந்தனையுடனும் பயணிக்கின்றார்களோ அன்றுதான் வெற்றியின் அத்திவாரத்தைத் தொட முடியும்.

ஆகையால், சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் வயது வித்தியாசமின்றி தங்களது திறமைகளை தீட்ட வேண்டும். அப்போதுதான் வெற்றி தேடி வரும்.

எனக்கு 1985 இல் துபாயில் வேலை கிடைக்கும் போது அங்கு 164 பேருக்கு நேர்முகத் தேர்வு இடம்பெற்றது. அதில் 40 பேர் தெரிவு செய்யப்பட்டனர். அதில் இரண்டாவது நபராக தெரிவு செய்யபட எனக்கு இறைவன் அருள்பாலித்தான்.

துபாய் சென்று மிகவும் குறுகிய காலத்தில் அதாவது 5 வருடங்களுக்குள் அதே கம்பனியில் முகாமையாளர் ஆனேன். 8 வருடங்களில் திட்டமிடல் பணிப்பாளர்! அதனோடே சுய முயற்சியை கைவிடாது பயணித்து 2007 இல் Toshiba Elevator எனும் சொந்த நிறுவனத்தை ஆரம்பித்தேன். இது எனது ஒரே பார்வையிலான இலக்கும், விடா முயற்சிக்கும் கிடைத்த சான்றாகும்.

பின்னர் மத்திய கிழக்கு முழுவதும் விநியோகம் இடம்பெற்றது. தொடர்ந்து ஜப்பானிலும் வியாபார விஸ்தரிப்பை மேற்கொண்டோம்.

இதற்கு முக்கிய காரணமாக கருதக்கூடியவை ஒழுக்கம், முயற்சி, காலம் தவறாமை போன்றனவாகும். உதாரணமாக சில வேளை இந்த வேலை கிடைக்காது போகும் என அந்த தருணத்தை தவறவிட்டிருந்தால் இன்று இந்த நிலை கேள்விக் குறியாகி இருக்கலாம்.

இவைகளை ஒரு பெரிய வழிகாட்டியாகத்தான் நான் பார்க்கிறேன்.
குறிப்பாக இலங்கையிலுள்ளவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என தெரியவில்லை. இலங்கை மிகவும் வளம் பொருந்திய நாடு. இந்த நாட்டிலேயே பல வளங்கள் உள்ளன. அவற்றை சரியாக பயன்படுத்தினால் இங்குள்ள இளைஞர்கள் பலரும் உச்சம் தொட்டு பலருக்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.

எனவே, இங்கு மட்டுமல்ல உலகிலுள்ள அத்தனை நாடுகளிலும் எத்தனையோ வளங்கள் எமக்கு சாதகமாக இருந்தாலும் அவற்றை விடா முயற்சியினாலும், தீர்க்கமான குறிக்கோளினாலும் மட்டுமே அடைய முடியும்.

 

 

(நேர்காணல்: கியாஸ் ஏ. புஹாரி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *