உள்நாடு

நிகழ் நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான திறந்த கலந்துரையாடல்.

கடந்த 17.02.2024 சனிக்கிழமை நிகழ் நிலை காப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பான பொது கலந்துரையாடல் ஒன்று சமூக நீதிக் கட்சியின் ஏற்பாட்டில் வெள்ளவத்தை பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் (WERC) கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சமூக நீதிக் கட்சியின் தலைவர் நஜா மொஹமத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, சட்ட முதுமாணி ருஷ்தி ஹபீப், சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான எர்மிஸா டீகல், இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்த்தன ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

சமூக நீதி கட்சியின் தலைவர் நஜா மொஹமத் அவர்கள் தமது தலைமையுரையில் நிகழ் நிலைகாப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மூலம் குறித்த இக்கலந்துரையாடலின் நோக்கங்களையும் சமூக நீதிக் கட்சி இதனை ஏன் முன்னெடுக்கிறது என்பதையும் தெளிவு படுத்தினார்.

இவ்விரு சட்டங்களும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்துவதாகவும், தொடர்ந்தும் பதவியில் இருக்கும் அரசாங்கங்கள் இவ்வாறான சட்டங்களை தொடர்ந்தும் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் அவசியம் குறித்தும் பேசினார். அந்த வகையிலேயே சமூக நீதிக் கட்சி இவ்வாறான விழிப்புணர்வுகளையும், சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

சமூக நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் நிகழ் நிலை காப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்பவற்றின் உள்ளடக்கம், அவற்றின் பாதிப்புகள், அவை மக்களின் அடிப்படை உரிமைகள், ஜனநாயகம், சுதந்திரம், பேச்சுரிமை, அரசியல் செயற்பாட்டு உரிமை, அரசாங்கத்தின் செயற்பாடுகளை கேள்விக்கு உட்படுத்தும் ஜனநாயக உரிமைகள் மீதான கட்டுப்பாடுகளை, தடைகளை எவ்வாறு ஏற்படுத்தும் எனவும், பதவியில் இருக்கும் அரசாங்கங்கள் தமது நலன்களுக்காக இந்த சட்டமூலங்களை எவ்வாறு துஷ்பிரயோகம் செய்ய முடியும், அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகள், மனித உரிமை மீறல்களை அரசாங்கம் எவ்வாறு மேற்கொள்ள முடியும் என விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் இந்த சட்ட மூலங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் சமூக நீதி கட்சியின் தவிசாளர் சிராஜ் மசூர் தேசிய அமைப்பாளர் அர்கம் முனீர், ஏனைய தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நௌஷாத் அப்துல் மஜீத், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள், சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் சமூக நீதிக் கட்சியின் உதவி பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷாத் அஹ்மத் அவர்களின் நன்றியுரையுடன் கலந்துரையாடல் நிறைவு பெற்றது.

மேலும் இந்த சட்டமூலங்கள் இரண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சமூக நீதிக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் நஜா மொஹமத் அவர்களும் பொது செயலாளர் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் அவர்களும் விசேட நிர்ணய வழக்குகளை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்குகளின் போது சமூக நீதிக் கட்சியின் மனுதாரர்கள் சார்பில் சட்டமுதுமாணி சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் அவர்கள் ஆஜராகி இவ்விரு சட்டமூலங்களும் எவ்வாறு அரசியலமைப்புக்கு முரணானது என்பதை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *