“கிறீஸ் மனிதன்” புகழ் கொலையாளிக்கு மரண தண்டனை..! – ஒரே இரவில் தாயும் மகளும் கற்பழிக்கப்பட்டுக் கொலை..!
2012 களில் நாட்டை உலுக்கிய காவத்தை கொட்டகெதன கிராமத்தில் இடம் பெற்ற பல இரட்டைக் கொலை தொடரில் ஒன்றான தாய் மகள் கொலை வழக்கில் குற்றவாளியான நபர் ஒருவருக்கு இன்று இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது..
இக்கிராமத்தில் தொடராக இடம் பெற்ற மர்ம இரட்டைக் கொலை தொடர் முழுநாட்டையும் அச்சத்தில் உறைய வைத்தது. இரண்டொரு நாட்கள் இடைவெளியில் இருவர் இருவராக அதுவும் பெண்கள் அக்கால பகுதியில் தொடராக இப்பகுதியில் கொலை செய்யப்பட்டு வந்தனர்.
இக்கொலைகளைச் செய்வது கிரீஸ் மனிதன் அல்லது கிறீஸ் யக்கா எனும் பேய் மனிதன் எனும் அச்சம் அன்று ஏற்படுத்தப்பட்டதால் பாதுகாப்புத் துறை கூட இந்த கிறீஸ் கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் பெரும் சவால்களை எதிர் கொண்டது.
ஆனால் இக்கொலைகள் அனைத்தும் ஏதோ ஒரு மர்மமான விடயத்தை மையப்படுத்திய கொலைகள் எனவும் “கிறீஸ் யக்கா” போர்வையில் அன்று நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் கொலைகள் வேறு பக்கம் திசை திருப்பப்பட்டு வந்தன.
இக்கொலை தொடரின் இரட்டை கொலை சம்பவத்தில் தாயையும் மகளையும் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட “செயின் கில்லர் ” எனும் நீல் லக்ஷ்மன் என்பவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி செல்வி லங்கா ஜயரத்ன இன்று (19) நீதிமன்றத்தில் எரிந்து கொண்டிருந்த மின் விசிறிகளையும் விளக்குகளையும் அணைத்து விட்டு குற்றவாளிக்கு இந்த
மரண தண்டனையை அறிவித்தார்.
DNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான வழக்கு தொடரை நடத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க இவ்வழக்கு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் இத்தீர்ப்பினை வழங்கிய நீதிபதி, தான் மரண தண்டனை தீர்ப்பு எழுதிய பேனாவை நீதிமன்ற ஆசனத்தில் இருந்தவாறு உடைத்தார்.
147 பக்கங்கள் கொண்ட இந்த இரட்டை கொலைகளின் தீர்ப்பு சுமார் இரண்டு மணித்தியாலங்களாக நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.