ஆப்கானை பந்தாடிய இலங்கை ரி20 தொடரையும் தனதாக்கியது
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தீர்மானமிக்க 2ஆவது ரி20 போட்டியில் அனுபவ வீரரான அஞ்சலோ மெத்யூஸின் சகலதுறை அசத்திலின் உதவியுடன் 72 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி ஒரு போட்டி மீதமிருக்க ரி20 தொடரையும் தனதாக்கி அசத்தியது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் வனிந்து ஹசரங்கவின் அதிரடியாலும், மதீஷ பத்திரனவின் மிரட்டல் பந்துவீச்சாளும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றிருந்தது இலங்கை அணி.
இந்நிலையில் 2ஆவது தீர்மானமிக்க போட்டி இன்று ரங்கிரி மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பித்திருந்தது. போட்டியில் முதலில் துடுப்பாட்டப் பணிக்கப்பட்ட இலங்கை அணி, சதீரவின் (51) அரைச்சதத்தாலும், மெத்யூஸின் 22 பந்துகளுக்கு 42 ஓட்டங்களின் உதவியுடனும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று கொண்டது. பந்துவீச்சில் முஹம்மத் நபி மற்றும் அஸ்மதுல்லாஸ் ஒமர்ஷாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பின்னர் 188 என்ற கடின இலக்கை விரட்டக் களம் நுழைந்த ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப அதிரடி வீரர்கள் இலங்கை பந்துவீச்சில் நிலைகுலைந்து பெவிலியன் திரும்பினர். ஒரு கட்டத்தில் 31 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்டுக்களையும் இழந்து தவித்தது ஆப்கானிஸ்தான்.
இருப்பினும் முஹம்மத் நபி மற்றும் கரீம் ஜனட் ஆகியோர் முறையே 27 மற்றும் 28 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த போதிலும், ஆப்கானிஸ்தான் அணியால் 17 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்து.
இதனால் இலங்கை அணி 72 ஓட்டங்களால் அசத்தல் வெற்றியை பதிவு செய்ததுடன் ஒரு போட்டி மீதமிருக்க தொடரை 2:1 என தனதாக்கியது. பந்துவீச்சில் மெத்யூஸ் , பினுர, வனிந்து மற்றும் பத்திரன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருக்க, போட்டியின் நாயகனாக சகலதுறையில் அசத்திய அஞ்சலோ மெத்யூஸ் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)