சவுதி பிரஜைகளிடமிருந்து கப்பமாக திரட்டிய 147 கோடி, உள்ளுர் கணக்குகளை பரிசோதிக்குமாறு நீதவான் உத்தரவு
பாதாள உலகக்குழுவினரால் சவுதி அரேபிய பிரஜைகளிடமிருந்து கப்பமாக திரட்டிய 147 கோடி ரூபா பணம் இலங்கையின் பிரதான கம்பெனிகளில் முதலீடு செய்வதற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான கணக்குகளை பரிசீலனை செய்யுமாறும் கொழும்பு பிரதான மாஜிஸ்ரேட் பிரசன்ன அல்விஸ் இரகசிய பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
சவுதி அரேபியாவின் பிரஜைகளிடம் இருந்து 147 கோடி ரூபாவை கொள்ளையடித்து கப்பமாக பெற்று முதலீடு செய்தது சம்மந்தமாக இரகசிய பொலிஸார் நடத்தும் விசாரணை தொடர்பாக பிரதம மாஜிஸ்ரேட்விடம் அது தொடர்பான மேலதிக விசாரணைகளை செய்வதற்கு அனுமதி கோரி இருந்தார்கள்.
நாட்டின் அரச தனியார் வங்கிகள் ஊடாக நாட்டின் பல நிறுவனங்களில் இப்பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இரகசிய பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பித்திருந்தனர்.
சவுதி அரேபியாவின் தூதுவராலயம் இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்திருந்த வேண்டுகோளை அடுத்து இரகசிய பொலிசார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
குற்றச் செயல்கள் தொடர்பாக அரசுகளுக்கு இடையே இருக்கும் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் அது தொடர்பான சட்டத்தின் ஊடாக சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து இரகசிய பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
147 கோடி ரூபா இந்த நாட்டில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக இரகசிய பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.சவூதி அரேபியாவில் கப்பமாக பெற்ற பணம் கருப்பு பணமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றதா? அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் இலங்கையில் இருக்கிறார்களா? போன்ற விடயங்களை இலங்கையில் விசாரணை செய்வதற்கு அனுமதிகோரி இரகசிய பொலிசார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இரகசிய பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க மாஜிஸ்ரேட் அரச தனியார் வங்கிகளின் கணக்குகளை பரிசீலிப்பதற்கும் அது தொடர்பாக அறிக்கைகளை சமர்பிப்பதற்கும் அனுமதி வழங்கியது.