அதிரடியில் வனிந்துவும், வேகத்தில் மதீஷவும் மிரட்ட திரில் வெற்றி பெற்றது இலங்கை
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் வனிந்துவின் அதிரடியும் ,பத்திரனவின் வேகமும் கைகொடுக்க 4 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்றது இலங்கை அணி.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டி நேற்று (17) இரவு 7 மணிக்கு புணர்நிர்மானம் செய்யப்பட்ட தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இப்ராஹிம் சத்ரான் இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
இதற்கமைய முதலில் களம் புகுந்த இலங்கை அணிக்கு முன்வரிசை வீரர்களான பத்தும் நிசங்க (6), குசல் மெண்டிஸ் (10), தனஞ்சய டி சில்வா (24) மற்றும் சதீர சமரவிக்ரம (25) என ஓரளவிற்கு ஓட்டங்களைக் குவித்து ஆறுதல் கொடுத்தனர். இருப்பினும் மத்திய வரிசையில் வந்த அணித்தலைவரான வனிந்து ஹசரங்க ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை வெளுத்தெடுத்து வெறும் 32 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 67 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார்.
இருப்பினும் அடுத்தடுத்து வந்த மெத்யூஸ் மற்றும் தசுன் ஆகியோர் தலா 6 ஓட்டங்களுடன் ஏமாற்ற இலங்கை அணி 19 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் பறூக்கி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 161 என்ற எட்டக்கூடிய வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த ஆப்கானிஸ்தான் அணிக்கு புதிய அணித்தலைவரான இப்ராஹிம் சத்ரான் ஒருபுறம் நிலைத்திருந்து ஓட்டங்களைச் சேர்க்க மறுபுறம் வந்த குர்பாஸ் (13) குல்படின் நைப் (16) என இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றனர். இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்மதுல்லாஸ் ஒமர்ஷாய் (2) முஹம்மது நபி (9) நஜிபுல்லாஹ் சத்ரான் (0) என வெளியேறி ஏமாற்றம் கொடுத்தனர்.
இருப்பினும் ஆப்கான் அணியின் வெற்றிக்கு 12 பந்துகளுக்கு 14 ஓட்டங்கள் தேவையாய் இருக்க 19ஆவது ஓவரை வீசிய மதீஷ பத்திரன வெறும் 3 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுக்களை சாய்த்தார். இதனால் இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவையாய் இருக்க ஆப்கானிஸ்தான் அணியால் 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது. இதனால் அவ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை மட்டுமே பெற்றதனால் இலங்கை அணி 4 ஓட்டங்களால் திரில் வெற்றியை பதிவு செய்ததுடன் தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது. இப்ராஹிம் சத்ரான் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மதீஷ பத்திரன 24 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வெற்றி கொண்டார்.
(அரபாத் பஹர்தீன்)