பாகிஸ்தான் தேர்தலில் மோசடி..! தேர்தல் அதிகாரி அதிரடி..! இஸ்லாமாபாத்தில் பரபரப்பு..!
பாகிஸ்தான் நாட்டில் கடந்த எட்டாம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்த கையோடு வாக்கு எண்ணும் நடவடிக்கையும் தொடங்கியது. இந்நிலையில் நீதிக்கு எதிரான பல செயற்பாடுகள் இடம் பெற்றிருப்பதாகவும், தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என தேர்தல் அதிகாரி லியாகத் அலி சத்தா குற்றம் சுமத்தியுள்ளார்.
இக் குற்றச்சாட்டானது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடந்த அனைத்து தவறுகளுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்வதோடு இதனுடன் தொடர்புடைய மற்றவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் அரசியல் தலைவர்கள் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடாதீர்கள் என்பது என்னுடைய வேண்டுகோள் எனத் தெரிவித்து தனது தேர்தல் அதிகாரி பதவியை இராஜினாமா செய்தார்.
நீதிக்கு எதிரான இந்த செயலுக்காக நான் தண்டிக்கப்பட வேண்டும், நாட்டின் முதுகில் குத்துவது தன்னை தூங்க விடாது என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானில் தேர்தல் முடிவுற்ற பின் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டது. பிலாவல் பூட்டோ உடன் சேர்ந்து கூட்டணி அமைக்க நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ள நிலையில் பல இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை கட்சியாக திகழும் இம்ரான் கானின் தெஹ்ரிக் ரீ இன்சாப் கட்சி ஆதரவாளர்கள் முடிவுகள் மாற்றப்பட்டதாகவும், தாங்களே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை இறுதியாக அனைத்து தொகுதிகளுக்குமான முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இம்ரான் கான் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்வதோடு நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.