5ஆவது லங்கன் பிரீமியர் லீக் தொடர் ஜுலை ஒன்றில் ஆரம்பம்
லங்கன் பிரீமியர் லீக் ரி20 தொடரின் 5ஆம் அத்தியாயம் இவ் வருடம் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியிலிருந்து 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக இன்றைய ஊடக அறிக்கையில் இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் வருடா வருடம் இடம்பெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி20 கிரிக்கெட் தொடரின் அத்தியாயங்கள் 4 நிறைவுக்கு வந்திருக்க 5ஆவது அத்தியாயம் தொடர்பான திகதி மற்றும் போட்டிகளின் எண்ணிக்கை தொடர்பாக விடயங்களை இலங்கை கிரிக்கெட் சபை இன்று தமது ஊடக அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் இவ் 5ஆவது லங்கன் பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மேலும் இதன் இறுதிப் போட்டி அதே மாதத்தின் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத் தொடரில் கடந்த அத்தியாயங்களைப் போல 5 அணிகள் போட்டியிடவுள்ளதாகவும் ஒரு அணி மற்றைய அணிகளுடன் தலா இரு முறை லீக் ஆட்டங்களில் போட்டியிட வேண்டும் எனவும் இ முதல் லீக் சுற்றில் மொத்தம் 20 போட்டிகள் இடம்பெறும் எனவும் மொத்தமாக 24 போட்டிகள் இத் தொடரில் இடம்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இந்நிய பிரீமியர் லீக் போட்டிகளைப் போன்று லீக் போட்டி முடிவில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் முதல் அரையிறுதியான குவாலிபயர் 1 போட்டியில் பங்கேற்று அதில் வெற்றி பெரும் அணி இறுதிப் போட்டிக்கும்இ அப் போட்டியில் தோல்வியடையும் அணி 3ஆம் மற்றும் 4ஆம் இடங்களைப் பெறும் அணிகள் மோதும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெரும் அணியுடன் 2ஆவது குவாலிபயர் போட்டியில் மோதி அதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும் அடிப்படையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இத் தொடரில் ஒரு அணி குறைந்தது 20 வீரர்களையும் அதிகபட்சம் 24 வீரர்களையும் ஏலத்தின் அடிப்படையில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அதில் கட்டாயம் 6 வெளிநாட்டு வீரர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அரபாத் பஹர்தீன்)