விளையாட்டு

கிரிஸான் சன்ஜுலவின் அசத்தலால் உகண்டாவை மீண்டும் வென்றது இலங்கை உயர் செயற்திறன் அணி

சுற்றுலா உகண்டா கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் கிரிஸான் சன்ஜுலவின் அரைச்சதம் கடந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் 7 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் அணி தொடரின் 3:0 என முன்னிலை பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 7 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் அணி வெற்றி பெற்று முன்னிலை பெற்றிருறந்தது. இந்நிலையில் 3ஆவது போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

இப் போட்டியில் முதலில் துடுப்பாடக் களம் நுழைந்த உகண்டா அணிக்கு சிமோன் சிஜாசி மிகச் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி அரைச்சதம் கடந்து 70 ஓட்டங்களையும் , ரோகர் முகாசா 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க உகண்டா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் டனால் ஹேமந்த மற்றும் லக்சான் சந்தகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 166 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் அணிக்கு கிரிஸான் சன்ஜுலவின் அசத்தல் துடுப்பாட்டம் கரம் கொடுக்க 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே பறிகொடுத்த 168 ஓட்டங்களைப் பெற்று 3ஆவது வெற்றியையும் பதிவு செய்தது இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் அணி. இவ்வணியின் சார்பில் கிரிஸான் சன்ஜுல ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களையும் , அசான் விக்ரமசிங்க மற்றும் கமில் மிஸார ஆகியோர் தலா 34 மற்றும் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *