இலங்கையின் ஓட்ட இயந்திரம் பெத்தும் நிசங்க
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் சதம் விளாசி பெத்தும் நிசங்க குறைந்த ஒருநாள் போட்டிகளில் 2000 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது. இந்நிலையில் அவ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த பெத்தும் நிசங்க இலங்கையின் முதல் இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற வரலாற்று பெருமைக்கு உரித்தானார்.
அத்துடன் நேற்று நிறைவு பெற்ற 3 ஆவதும் இறுதியுமான போட்டியில் சதம் பெற்றுக் கொண்டதன் மூலம் இலங்கை அணி சார்பில் சர்வதேச ஒருநாள் அரங்கில் 2000 ஓட்டங்களைக் கடந்தார். இதனடிப்படையில் 63 இன்னிங்ஸ்களில் 2000 ஓட்டங்களைக் கடந்து முதலிடத்தில் இருந்த உபுல் தரங்கவை பின் தள்ளி வெறும் 52 இன்னிங்ஸ்களில் முதலிடம் பிடித்தார்.
மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு இரட்டைச் சதம் (210*), ஒரு சதம் (118) அடங்களாக 346 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் இலங்கையில் இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற பெயரையும் பெத்தும் நிசங்க தனதாக்கினார்.
அத்துடன் இத் தொடரின் முதல் மற்றும் 3ஆவது போட்டிகளின் ஆட்டநாயகன் விருதுகளையும், இத் தொடரின் நாயகன் விருதையும் வெற்றி கொண்டு அசத்திய பெத்தும் நிசங்க தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணியின் ஓட்ட இயந்திரமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)