“மருந்து திருட்டு மோசடியில் ஈடுபட்ட போதாக்குறைக்கு நாட்டை தற்போது ஏல பூமியாகவும் மாறிவிட்டனர்..” -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
வங்குரோத்து நாட்டில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் பெற முடியாதவர், நாட்டை வங்குரோத்தடையச் செய்த தரப்பினருடன் கைகோர்த்துக் கொண்டு, ஜனாதிபதி பதவியை பெற்று, அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் இலவச மருந்துகளில் கூட திருடி வருகின்றனர்.மனித இம்யூனோகுளோபுலின், மெரோபெனெம் போன்ற பல மருத்துகளில் திருடி வருகின்றனர். மில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதியான மருந்துகளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைத்தமையினால், மருந்துகள் பாவனைக்கு உகந்த விதமாக அழிந்து விட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறான ஊழலைக் கண்டு ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்த போது, அரசாங்கத்தில் இருந்து 113 பேர் இந்த தரமற்ற மருந்துகளுக்கு தமது கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர். இது போதாக் குறைக்கு நாட்டை ஏல பூமியாக மாற்றியுள்ளனர். காலி கிந்தோட்டை Plywood Manufacturers கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 17 ஏக்கரை 82 இலட்சத்திற்கு மொத்தமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தொழிலதிபர் குறித்த நிலத்தை ஏலத்திற்கு விட்டுள்ளார். இது தொடர்பாக பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் விசாரணை நடந்து வரும் போதே இவ்வாறு ஏலம் விடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அமைச்சர்கள் ஒவ்வொரு இடமாக விற்று சிரித்து மகிழ்ந்து வருகின்றனர்.நாட்டின் குடிமக்களுக்கும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சொந்தமான இந்த தேசிய வளங்களே இவ்வாறு ஏலம் விடப்பட்டு வருகின்றன. இவ்வாறு சொத்துக்களை விற்பனை செய்வது பாரிய அவலமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 94 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், இரத்தினபுரி, நிவிதிகல, எலபாத மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று (13) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் கோரும் முறைமை மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஏலவே ஆரம்பித்து விட்டது. பதவி ஆசை இல்லாமல்,வெற்றுப் பேச்சுக்களை விடுத்து ஐக்கிய மக்கள் சக்தியே செயற்பாட்டில் இதை காண்பித்துள்ளது. 75 வருட கால வரலாற்றில், எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்காக உழைத்த ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியாகும். எனவே, 2019 போன்ற கனவு உலகில் மிதந்து நாட்டை மீண்டும் அழிவின் வாயிலுக்கு இட்டுச் செல்லாமல் இருக்கும் முடிவை மக்களே எடுக்க வேண்டும்.நாடு எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு இந்த ஆட்சியாளர்களிடம் தீர்வில்லை.
பிள்ளைகளுக்காக உண்மையைப் பேச வேண்டும்.
ஒரு தரப்பினர் சிங்களம் மட்டும் என்று சொல்லும் போது, மற்றைய தரப்பினர் தமிழ் மட்டுமே என கூறுகின்றனர். இப்படியே போனால் பழைய பயணத்தை இன்னும் 75 வருடங்களுக்கும் தொடரலாம். இதை விடுத்து புதிய காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களுக்கு உட்படுத்துவது தான் இங்கு பிரதானமானது. வாக்குகளை நோக்காக் கொண்டல்லாது பிள்ளைகளுக்காக உண்மையைப் பேச வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.