விளையாட்டு

பெத்தும் நிசங்கவின் அசத்தலால் ஆப்கானுக்கு வெள்ளையடித்து ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை..

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் ஆரம்ப வீரர்களான பெத்தும் நிசங்கவின் சதமும், அவிஷ்க பெர்ணான்டோவின் அரைச்சதம் கடந்த துடுப்பாட்டமும் கரம் கொடுக்க 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 3:0 என வெள்ளையடித்துக் கைப்பற்றியது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 ரி20 போட்டி அடங்கிய முழுமையான தொடரில் டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்தது. அடுத்து ஆரம்பித்த 3 ஒருநாள் போட்டிகளில் முதல் இரு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை தனதாக்கியிருந்தது.

இந்நிலையில் 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (14) கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க மற்றும் மகேஷ் தீக்சன ஆகிய இரு முன்னனி சுழல்பந்து வீச்சாளர்களுக்கும் ஓய்வு வழங்கப்பட்டு அவ்விருவருக்கும் பதிலாக துனித் வெல்லாலகே மற்றும் அனுபவமிக்க அகில தணஞ்சய ஆகிய இரு சுழல்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இடம்பெற்ற நாணயச் சுழற்சியில் ஆப்கான் அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது. இதற்கமைய களம் கண்ட ஆப்கான் துடுப்பாட்ட வீரர்களில் ஆரம்ப வீரரான ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் 48, ரஹ்மத் ஷா 65 மற்றும் அஸ்மதுல்லாஸ் ஒமர்ஷாய் 54 என தம் பங்கிற்கு சிறப்பான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக் கொடுத்த போதிலும் பின் வரிசை நிலைக்காமல் போக 48.2 ஓவர்களுக்கு மாத்திரம் முகம் கொடுத்து 266 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து ஆப்கான் அணி. பந்துவீச்சில் ப்ரமோத் மதுஷான் 3 விக்கெட்டுக்களையும், அகில, வெல்லாலகே மற்றும் அசித ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் சவாலான 267 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரரான பெத்தும் நிசங்க மற்றும் அவிஷ்க பெர்ணான்டோ ஜோடி அதி சிறந்த ஆரம்பத்தைக் கொடுத்தது. இவ் இருவரில் பெத்தும் நிசங்க சதம் கடந்து 118 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்ணான்டோ 91 ஓட்டங்களையும் பெற்றதுடன் முதல் விக்கெட் இணைப்பாட்டத்திற்காக 173 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை இலகுபடுத்தினர். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் தன் பங்கிற்கு 40 ஓட்டங்களை அடித்துக் கொடுக்க இலங்கை அணி 35.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றது 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியை பதிவு செய்தது.

இந்த இலகு வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3:0 என வெற்றி கொண்ட இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு வெள்ளையடிப்புச் செய்து கிண்ணத்தை தனதாக்கியது. இப் போட்டியின் நாயகனாகவும் ஒருநாள் தொடரின் நாயகனாகவும் சதம் மற்றும் இரட்டைச் சதம் விளாசிய பெத்தும் நிசங்க தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *