உள்நாடு

கல்முனையில் பாரிய ஆர்ப்பாட்டம்..!

காஸா மீதான இஸ்ரேலின் மிலேச்சத்தனமான இன அழிபபு தாக்குதலையும், அங்கு அப்பாவி உயிர்கள் பலியாவதைக்கண்டித்தும், உடனடியாக யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியும் கல்முனை மாநகரில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது.
கல்முனை வாழ் மக்கள் சார்பில் கல்முனையின் பிரபல விளையாட்டுக்கழகமான விக்டோரியாஸ் விளையாட்டுக்கழகம் இந்த கண்டன, எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், கல்முனை விக்டோரியாஸ் விளையாட்டுக்கழகத் தலைவருமான ஏ.எம்.றியாஸ்(பெஸ்டர்) தலைமையில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.
கல்முனை நகர ஜும்ஆபள்ளிவாசல் முன்றலில் ஆரம்பமான இந்தப்பேரணி கல்முனை பழைய பஸ் நிலைய வளாகம் வரை இடம்பெற்றது, அங்கு இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதல்களைக் கண்டிக்கும் உரைகள் இடம்பெற்றதுடன், பாதிக்கப்பட்டுள்ள, உயிர் நீத்த மக்களுக்காக விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இதேவேளை இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலைக்கண்டித்தும், யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தியும், வாசகங்களைக் கொண்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன்,
அவற்றைக் கோஷமாக எழுப்பியும், குறிப்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மெத்திகியாகுவைக் கண்டித்தும், கோஷங்களை எழுப்பினர்.
ஐ.நாவே உன் நா எங்கா? , பாலஸ்தீனுக்கு சுதந்திரமளி, யுத்தத்தை நிறுத்து என்பன போன்ற வாசகங்களை கொண்ட பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஏந்தியிருந்தனர்.
கல்முனை ஜெமீலின் ஞாபகர்த்த வைத்தியசாலையின் தவிசாளர் டாக்டர். றிஸான் ஜெமீலின் அனுசரணையுடன் பெருவெற்றிகரமாக இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியின் இறுதியில் அல்-ஹாபிழ் மௌலவி. எம்.ஐ.எம்.றிபாஸ் துஆ பிரார்த்தனை செய்தார்.
மேலும் ஆர்ப்பாட்ட இறுதியில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ், ரி.எம்.றிபாய் (அதிபர்), ஷாமஜீத் ஆகியோர் இஸ்ரேலின் காஸாமீதான தாக்குதல்களைக் கண்டித்து உரையாற்றினர்.
(ஏ.எல்.எம்.சலீம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *