உள்நாடு

அம்பாறை மாவட்ட செயலாளருக்கு பெரும் கௌரவம்.!

அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரமவுக்கு, அவரது இன,மதபேத மற்ற அளப்பரிய சேவைகளைப் பாராட்டி மாவட்டத்தின் முக்கிய முஸ்லிம் பிரதேசமான நிந்தவூரில் பெரும் கௌரவம் அளிக்கப்பட்டது.

நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன் புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில், “சுதந்திர இரவுகள்” எனும் தலைப்பில் இடம்பெற்ற வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வில்வைத்தே, நிந்தவூர் மக்கள் சார்பில் மாவட்ட செயலாளருக்கு இந்த பெரும் கௌரவம் அளிக்கப்பட்டது.
நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லதீப் தலைமையிலும், பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தலைவரும், நிருவாக உத்தியோகத்தருமான எம்.ரீ.எம்.சரீமின் நெறிப்படுத்தலிலும் கோலாகலமாக இடம்பெற்ற சுதந்திர இரவுகள் நிகழ்வில், மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நிகழ்வின் முக்கிய அங்கமாக மாவட்ட செயலாளருக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரமவுக்கு, விசேட கிரீடம் அணிவிக்கப்பட்டு, பொன்னாடைபோர்த்தியும், நினைவுச்சின்னம் வழங்கியும் பெரும் கௌரவம் அளிக்கப்பட்டது.
நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன் அன்னாருக்கு இந்த கௌரவத்தின் போது கிரீடம் அணிவித்ததுடன், பிரதேச செயலாளர் அப்துல் லதீப் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கினார்.
நிந்தவூர் மக்கள் சார்பிலான இந்த கௌரவம் தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்த மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம,
பாமர மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று கடமையாற்றும் நாம் அந்த மக்களுக்கு திருப்திகரமான, அர்ப்பணிப்பான சேவைகளை ஆற்றுவதன் மூலமே, இத்தகைய கௌரவங்களுக்கு உட்பட முடியும், இதனையே நான் கௌரவமாக எதிர்பார்க்கின்றேன்” எனக்கூறினார்.
மேலும் நிகழ்வில் சிங்கள மொழியில் பாடல் ஒன்றைப்பாடி மகிழ்வித்த மாவட்ட செயலாளர்,
மாவட்டத்தில் அஸ்வெசும மற்றும் தொகை மதிப்பு வேலைத்திட்டங்களை சிறப்புறவும், முதன்மை நிலையிலும் பூர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்பாக செயற்பட்ட நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களையும், அதனை நெறிப்படுத்திய பிரதேச செயலாளரையும் விதந்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
(ஏ.எல்.எம்.சலீம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *