இலங்கைக்கு எதிரான ரி20 தொடர். ரஷீத்கான் இல்லாத ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு
இலங்கை அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்காக ஆப்காணிஸ்தான் குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக் குழாத்தில் அணித்தலைவரான ரஷீத்கான் காயம் காரணமாக இணைக்கப்படாமையால் அவருக்கு பதிலாக இப்ராஹிம் சத்ரான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் தோல்வியுற்று ஒருநாள் தொடரின் ஒரு போட்டி மீதமிருக்க அதையும் இலங்கை அணியிடம் இழந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 17, 19 மற்றும் 21ஆம் திகதிகளில் தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இரவுப் போட்டியாக இடம்பெறவுள்ள இத் தொடருக்காக வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய இத் தொடருக்கான இப்ராஹிம் சத்ரான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி இன்று அந்நாட்டு கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவ் அணியின் ரி20 தலைவரான ரஷீத்கான் காணம் குனமடையாதமையால் இத் தொடரில் இணைக்கப்படவில்லை. அதன் காரணமாக இத் தொடருக்கு இப்ராஹிம் சத்ரானுக்கு தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருநாள் தொடருக்கு வந்திருந்த சுழற்பந்து வீச்சாளரான முஜீபுர் ரஹ்மான் பயிற்சியின் போது காயமடைந்தமையால் ஒருநாள் தொடரிலிருந்து விலகியிருக்க இன்று வெளியிடப்பட்ட ரி20 தொடருக்கான அணியிலும் இணைக்கப்படவில்லை. இதற்கமைய, அறிவிக்கப்பட்டுள்ள அணியைப் பொறுத்தமட்டில் துடுப்பாட்ட வீரர்களாக ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ், ஹஸ்ரதுல்லாஹ் சஷய், நஜீபுல்லாஹ் சத்ரான், வபாடர் மொமண்ட் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மேலும் சகலதுறை வீரர்களாக முஹம்மத் நபி, குல்பதீன் நைப், கரீம் ஜெனட் மற்றும் அஜ்மதுல்லாஹ் ஒமர்ஷய் ஆகியோர் இணக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் பசால் ஹக் பரூக்கி, நவீன் உல் ஹக் மற்றும் இஜாக் ரஹீமி ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.மேலும் ஆப்கானின் பலமிக்க சுழல்பந்துவீச்சினைப் பெறுத்தவரையில் நூர் அஹமட், குவைஸ் அஹமட் ஆகிய இருவரும் பெயரிடப்பட்டுள்ளமை அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. (அ)
(அரபாத் பஹர்தீன்)