உள்நாடு

மாணவர்கள் பாடசாலையில் கல்வி பயிலும் வேளையிலையே திறன் பாடத்திட்டங்களை பயிற்றுவிக்க வேண்டும்.. -எஸ்.எம். சபீஸ்

மாணவர்கள் பாடசாலையில் கல்வி பயிலும் வேளையில் அவர்களுக்கு திறன் (Skill) பாடத்திட்டங்களை வழங்கி அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முன்னர் பயிற்றுவிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் 4 பேர் சேர்ந்து புதிய தொழில் முயற்சியை உருவாக்கும் முறைமையோடு மாணவர்களை வெளியில் அனுப்ப வேண்டும். அப்போதுதான் தொழில் தேடுபவர்களுக்கு பதிலாக தொழில் துறையை உருவாக்குபவர்களை உற்பத்தி செய்ய முடியும் என கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கறைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவருமான எஸ். எம். சபீஸ் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை – அக்கரைப்பற்று பிரதேச பாடசாலைகளில் இருந்து திறமை சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா வாசம் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரை நிகழ்த்திய அவர், துரதிஷ்டவசமாக எமது கல்வி முறை இன்னமும் அவ்விடத்துக்கு வரவில்லை. அதனால் பெற்றோர்கள் இம்முறையை நோக்கி எமது குழந்தைகள் மீது முதலீடு செய்யுங்கள். குறுகியகால திறன் கற்கை நெறிகளிலும் கவனம் செலுத்துங்கள். மேலும் இக்குழந்தைகள் விசேட ஆற்றல் கொண்டவர்கள். அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைவதோடு இந்த சமூகத்துக்கும் பிரயோசனமுடையதாக அமைய பிரார்த்திக்கின்றேன்.
தூக்கம் வந்தால் தூங்கி விடலாம், பசி எடுத்தால் சாப்பிட்டு விடலாம், தாகம் எடுத்தால் நீர் அருந்திவிடலாம் ஆனால் சாதனை படைத்தவர்களின் உணர்வுகளுக்கு நாம் என்ன வழங்கிட முடியும். அது பாராட்டு ஒன்றேதான் அதனைத்தான் வாசம் அமைப்பு மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
இந்நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், வாசம் அமைப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *