ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்போம்.. திருடர்களுடன் எமக்கு டீல் இல்லை.. -ஐ.ம.சட்டத்தரணிகள் மாநாட்டில் சஜித் திட்டவட்டம்..
பல்வேறு தனிநபர்களும் குழுக்களும் ஜனாதிபதியின் ஒப்பந்தளுக்கு இனங்க நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தோட்டத்தை முன்வைத்து வருகின்றனர். இது தனிப்பட்ட அரசியல் வாழ்வை நீட்டிக்கும் முயற்சியே தவிர தேச நலனுக்காக இலக்காக் கொண்ட அபிலாஷை அல்ல என்றும் இதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் மாநாடு நேற்றைய (11) தினம் கொழும்பில் நடைபைற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்நிகழ்வில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் Peter Maynard, ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் Shyam Divan மற்றும் இந்தியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பிரசாந்த குமார் ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தினர்.
🟩அரசியலமைப்பு பேரவையில் இருப்பது ஜனாதிபதியின் கைப்பாவைகள் அல்லர்.
அரசியலமைப்பு பேரவையை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாகும் என ஜனாதிபதி பாராளுமன்றத்திலும் வெளியேயும் தைரியமாக தெரிவித்து வருகிறார். இதன் மூலம் அதன் அங்கத்தவர்களை நிறைவேற்றுநரின் கீழ் உள்ளவர்கள் என்று அழைப்பது தவறு. நிறைவேற்று ஜனாதிபதியின் வரம்பற்ற அதிகாரங்களை மட்டுப்படுத்தவே அரசியலமைப்பு பேரவை நிறுவப்பட்டது. அதில் ஒரு அங்கத்தவராக, ஜனாதிபதியின் கைக்கூலியாகவோ அல்லது கைப்பாவையாகவோ செயற்படமாட்டேன் என்றும்,அனைத்து விடயங்களிலும் பாரபட்சமின்றி, சரியான முறையில் நீதி நியாயமாக, தீர்மானங்களை எடுப்பேன் என்றும் தான் பேரவையில் குறிப்பிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩கீழ் இருந்து மேலாக அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி கொள்கையைப் பின்பற்றுகிறோம்.
சந்தை சமூகத்தில் செயல்படும் மனிதநேய முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, வளங்களின் உருவாக்கம் மற்றும் உருவாக்கப்பட்ட வளங்களின் வருமானம்,
சமூக நீதி மற்றும் சமத்துவ அடிப்படையில் இரண்டையும் பகிர்ந்தளிப்பதே ஒரு கட்சியாக,ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கையாகும். சமூக ஜனநாயகத்தை மையமாகக் கொண்ட நடுத்தர பாதையே எமது கொள்கை. சமூகத்தில் எழும் பிரச்சினைகளை அடிமட்டத்திலிருந்து மக்கள் கருத்துக்களை உள்ளீர்த்த,பங்கேற்பு கொள்கையை வகுப்பதாகும்.
🟩ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்போம்.
ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், சட்டத்தின் ஆட்சியைப் பேணுதல் மற்றும் நீதியின் அடிப்படையில் நீதித்துறை செயல்முறையை நடைமுறைப்படுத்தி, பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் கருத்துக்களை கோரி நியாயமான தீர்வுகளை வழங்கும் கட்மமைப்பை செயல்படுத்துவோம். ஜனநாயகத்தின் மூன்று தூண்கள், அவற்றின் அதிகாரப் பகிர்வு மற்றும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறைமையினுள் வலுவான ஜனநாயக கட்டமைப்பை நாட்டில் நிறுவுவோம்.சுதந்திர ஊடகங்களும் நான்காவது தூணாகக் கருதப்பட்டு அவை பாதுகாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩அடிப்படை உரிமைகள் திருத்தப்பட வேண்டும்.
இந்நாட்டின் அரசியலமைப்பின் முக்கிய அங்கமான அடிப்படை உரிமைகள் பற்றி நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். அடிப்படை உரிமைகள் தொடர்பான பகுப்பாய்வு மேலும் விரிவுபடுத்தப்பட்டு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டு, தெளிவான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
🟩ஊழலை இல்லாதொழிக்கும் ஒரு புதிய முறைமை.
ஊழலை ஒழிக்க நடவடிக்கை எனுக்க வேண்டும். தற்போதைய ஊழல் எதிர்ப்புச் சட்ட உள்ளடக்கம் போதுமானதாக இல்லாததால், அரசியலமைப்பின் மிகவும் உயரிய பகுதியாக, ஓர் எளிய பெரும்பான்மையால் மாற்ற முடியாத ஒரு கட்டமைப்பாக ஊழல் எதிர்ப்பு நிறுவகம் நிறுவப்பட நடவடிக்கை எனுக்கப்படும். எவரும்,எந்த அதிகாரத்தாலும், செல்வாக்கு செலுத்த முடியாத முறைமை உருவாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
🟩திருடர்களுடன் எங்களுக்கு டீல் இல்லை.
நாட்டை வங்குரோத்தாக்கியவர்கள் யார் என்பதை வெளிக்கொணர ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சங்கமும், தேசிய அறிஞர்கள் பேரவையும் நடந்து கொண்டது போல, இந்நாட்டை அழித்த தரப்பினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, எமது நாட்டிற்கு இழந்த வளங்களும் சொத்துக்களும் மீட்கப்படும். இந்நாட்டை அழித்த திருடர்களுடன் எங்களுக்கு எந்த வகையிலுமான டீல்களும் இல்லை என அவர் தெரிவித்தார்.
🟩அரசாங்கத்தின் ஜனநாயக விரோத சட்டங்களை திருத்தம் செய்வோம்.
அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கத்தின் பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஜனநாயகத்தை சீர் குலைக்க கொண்டு வரப்பட்ட அனைத்து சட்டங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இரத்துச் செய்து, மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவோம் என்றும் தெரிவித்தார்.