உள்நாடு

ஊடகவியலாளர்களின் காட்டமான கேள்விகளுக்கு தெளிவான பதில் வழங்கிய விஜித ஹேரத்..

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான பதிலளிக்கையில் – பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்

இந்த விஜயத்திற்காக தேசிய மக்கள் சக்தி இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்ததா?

நாங்கள் அவ்விதமாக வேண்டுகோள் விடுக்கவில்லை. இந்திய அரசாங்கம்தான் எமக்கு அழைப்பு விடுத்தது. இந்திய அரசாங்கமே அனைத்தையும் திட்டமிட்டது.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்திய முதலீடுகள் பற்றியும் பேசினீர்களா?

அது பற்றிக் கலந்துரையாடினோம். நான் முதலில் தெளிவுபடுத்தியவாறு அதானி கம்பெனி அல்லது ஏனைய கம்பெனிகள் சம்பந்தமாக பெறுகைச் செயற்பாங்கோ அல்லது டெண்டர் செயற்பாங்கு கடைப்பிடிக்கப்படாமல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விதத்துடன் நாங்கள் இணங்குவதில்லை என்பதை தெளி்வாகக் குறிப்பிட்டோம். எமது ஆட்சியின்கீழ் திறந்த டெண்டர் கோரல்களின்கீழ் முதலீடுகளுக்கு வாய்ப்பளிப்போம் என்பதை நாங்கள் அறிவித்தோம். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள்.

அரசாங்கத்தின் அமைச்சர்களைவிட உங்களுடன் ஒரு காலத்தில் அரசியல் புரிந்தவர்கள் முன்வைக்கின்ற விமர்சனங்கள் அதிகமல்லவா?

அரசியல் கயமை காரணமாக முன்வைக்கின்ற விமர்சனங்களை நாங்கள் அதே நிறையில் நிராகரிக்கிறோம்: கவனஞ் செலுத்துவதும் கிடையாது. அரசியல் மயானத்திற்குள் போனவர்கள் அத்தகைய அவலக்குரல் எழுப்புகிறார்கள். வீரவங்சவும் அதைப்போல அவலக்குரல் எழுப்புவதை நான் கண்டேன். அரசியல் மயானத்திலிருந்து எழுப்புகின்ற அவலக்குரலை இந்த நாட்டின் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் எப்படியும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாங்கள் எமது நிலைப்பாட்டில் இருந்துகொண்டு செயலாற்றுவோம். எமது நாட்டின் வலுச்சக்தி சம்பந்தமாக அரசாங்கம் தவறான முறையியல்களை கடைப்பிடிக்கையில் நாங்கள் மிகவும் தெளிவாக அதற்கு எதிராக செயற்பட்டோம். அது தொடர்பில் எமது எந்தவிதமான மாற்றுக்கருத்தும் கிடையாது. எமது தோழர் ரஞ்சன் ஜயலால் தொழிற்சங்கங்கள் ஊடாக அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசியல் அகதிநிலைக்கு உள்ளாகி மரணப்படுக்கையில் இருந்துகொண்டு எழுப்புகின்ற அரசியல் அவலக்குரலில் பலனில்லை.

நாட்டின் சனாதிபதிக்கோ அல்லது எதிர்க்கட்சித் தலைவருக்கோ அழைப்பு இல்லாத ஒரு காலகட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த அழைப்பு சம்பந்தமாக வாழ்த்து தெரிவி்க்கிறோம். இந்தியா எவ்வாறான நோக்கத்துடன் உங்களுக்கு இவ்வாறான அழைப்பினை விடுத்தது?

நிகழ்கால சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்கள் ஆணை கிடையாது. இந்த நாட்டு மக்களின் மனங்களில் வேரூன்றியுள்ள தலைவர் தோழர் அநுர திசாநாயக்க என்பதையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்ற அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி என்பதையும் இந்தியா மாத்திரமன்றி எந்தவோர் உலக நாடும் எற்றுக்கொள்கின்றது. இலங்கைக்குள்ளே மக்களும் உலகமும் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் இயக்கம் திசைகாட்டியே. இதனால் விசேடமாக இந்தியா விடுத்த அழைப்பு தொடர்பில் நாங்கள் தன்னடக்கத்துடன் மகிழ்ச்சி அடைகிறோம். மக்களின் நல்லாசி கிடைக்காத தலைவர்களுக்கு அவ்வாறான அழைப்பு கிடையாது.

விஜயத்திற்கான அழைப்பு மக்கள் விடுதலை முன்னணி என்றவகையிலா கிடைத்தது? தேசிய மக்கள் சக்திக்கா?

தேசிய மக்கள் சக்திக்கே அழைப்பு கிடைத்தது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர், நிபுணத்துவ மருத்துவர் திரு. நிஹால் அபேசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர திசாநாயக்கவை உள்ளிட்ட நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர்கள்.

மக்கள் விடுதலை முன்னணி எனப்படுவதும் தேசிய மக்கள் சக்தி எனப்படுவதும் இரண்டா?

மக்கள் விடுதலை முன்னணி ஓர் அரசியல் கட்சியாகும். தேசிய மக்கள் சக்தி என்பது மக்கள் விடுதலை முன்னணியையும் உள்ளடக்கிய அரசியல் இயக்கங்கள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புக்களின் சேர்க்கையால் உருவாகிய விரி்வான மக்கள் சக்தியாகும்.

மக்கள் விடுதலை முன்னணியிடம் இருப்பது சோஷலிஸ வேலைத்திட்டமாகும். தேசிய மக்கள் சக்தியிடம் இருப்பது லிபரல்வாத வேலைத்திட்டமாகும். இவையிரண்டுமே ஒன்றாகவா பயணிக்கின்றது?

லிபரல்வாத, சோஷலிஸ என நீங்கள் கருதியது என்ன? பதற்றப்படத் தேவையில்லை. மிகவும் தெளிவாகின்றது. உலக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அமைவாக இலங்கையின் ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் நாங்களும் மாற்றமடைந்துள்ளோம். எமது கொள்கைகள் மிகவும் தெளிவாக சோஷலிஸ கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட புதிய உலக நிலைமைக்கு ஒத்துவரத்தக்க பொருளாதார, அரசியல் கொள்கையாகும். தேசிய மக்கள் சக்தியின் இந்த கொள்கை நாட்டுமக்கள் ஏற்றுக்கொள்கின்ற கொள்கையாக மாறியுள்ளது.

நீங்கள் அமூல் கம்பெனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவேளையில் உங்களின் பிரதிநிதிகள் இந்நாட்டில் அமூல் கம்பெனிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஒன்றுக்கொன்று முரணான இந்த செயற்பாடு என்ன?

எனது தெளிவுபடுத்தலில் தெளிவாகவே பதில் இருந்தது. மீண்டும் தெளிவுபடுத்துவதாயின் பெறுகைச் செயற்பாங்கு மற்றும் டெண்டர் கோராமல் அரசாங்கம் முன்னெடுத்துவருகின்ற செயற்பாடுகளை எதிர்ப்பது எந்தவொரு நிறுவனம் சம்பந்தமாகவும் எமது பொதுவான நிலைப்பாடாகும்.

மிகஅதிகமாக கலந்துரையாடலுக்கு இலக்காகிய விடயங்கள் என்ன?

பிராந்தியத்தின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினை மீதே அதிகமாக கவனம் செலுத்தப்பட்டது. தெற்காசியாவின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையே அவர்களின் முதன்மைத் தலைப்பாக அமைந்தது. உலக புவி அரசியல் போட்டியில் பிராந்தியத்திற்கு ஒருசில அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன. அது சம்பந்தமாக நாங்கள் ஒரு நாடு என்றவகையில் எமது நாட்டின் தன்னாதிக்கத்தை பாதுகாத்துக் கொள்வதைப்போலவே பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இடம்பெறக்கூடியவகையிலான எந்தவொரு வழிமுறையையும் பின்பற்றுவதில்லையென்பதை தெளிவுபடுத்திக் கூறினோம். எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக செயலாற்றுகையில் கட்டாயமாக பிராந்தியத்தின் பாதுகாப்பு சம்பந்தமாக கவனஞ் செலுத்துவோம். இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சீனாவுடன் கொடுக்கல்வாங்கலில் ஈடுபடவேண்டாமெனக் கூறவும் இல்லை. எமக்கு அது ஏற்புடையதும் அல்ல. பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை என்பதைதெளிவாகக் கூறினோம்.

இந்த வருடத்தில் சனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் நடாத்துவதாக சனாதிபதி கூறியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை அமைக்க இந்தியாவின் ஒத்துழைப்பு கிடைப்பதாக கூறப்பட்டதா?

அத்தகைய உரையாடல் இடம்பெறவில்லை. இலங்கை மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படுகின்ற அரசாங்கத்துடன் அவர்கள் கொடுக்கல்வாங்கலில் ஈடுபடுவார்களேயொழிய அரசியல் கட்சியென்றவகையில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களின் ஒத்துழைப்பு எமக்குத் தேவையில்லை. அத்தகைய ஒன்றை அவர்கள் கூறவும் இல்லை. எனினும் தேர்தல்களை நடத்தாமை பற்றிப் பேசினார்கள். உள்ளுரதிகாரசபை தேர்தலை நடாத்தாமை, மாகாணசபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை தவறானதென நாங்கள் மிகவும் தெளிவாகக் கூறினோம். அது மாத்திரமல்ல, இந்நாட்களில் கூட்டுறவுச்சங்க தேர்தல்களும் பிற்போடப்பட்டுள்ளன. அது தொடர்பில் நாங்கள் இணங்குவதில்லை என தெளிவுபடுத்திக் கூறினோம். சனாதிபதி தேர்தல் கட்டாயமாக நடாத்தப்படல் வேண்டுமென நாங்கள் சுட்டிக்காட்டினோம். ஒரு கட்சி என்றவகையில் நாங்கள் தயார் எனவும் கட்டாயமாக அதில் வெற்றிபெறுவோம் என்பதையும் அவர்களுக்கு எடுத்தியம்பினோம்.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டால் சீனா எத்தகைய நிலைப்பாட்டினை எடுக்கும்?

இந்தியாவுடன் பேச்சுவாரத்தைகளை மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல. அத்துடன் சீனாவுடன் குறிப்பாக கமியுனிஸ்ட் கட்சியுடன் நாங்கள் நீண்டகாலமாக தொடர்புகளை பேணிவந்துள்ளோம். எனினும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக நாங்கள் செயலாற்றினோம். ஒவ்வொரு நாடும் தொடர்பிலான எமது நிலைப்பாடு அதுவாகும். சீனா அல்லது இந்தியாவுடன் உறவுகளைப் பேணிவந்தோம் என்பதற்காக நாங்கள் எமது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றியமைக்கின்ற கட்சியல்ல..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *