மக்கள் வங்கியை கல்முனையில் புதிய கட்டிடத் தொகுதியில் அமைக்கவும், மாவடிப்பள்ளியில் ஏ.ரி.எம் நிறுவவும் ஹரீஸ் எம்.பி நடவடிக்கை; விரைவில் விலை மனுவும் கோரப்படுகிறது..!
மக்கள் வங்கியின் கல்முனை கிளையை புதிய நவீன கட்டிட தொகுதியில் அமைக்க ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மக்கள் வங்கியின் தவிசாளர் சுஜீவ ராஜபக்ஷவுக்கு வழங்கிய பணிப்புரைக்கு இணங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கும் மக்கள் வங்கி தவிசாளருக்குமிடையிலான சந்திப்பு மக்கள் வங்கி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் கல்முனை மாநகரம் இலங்கையின் முக்கிய வர்த்தக நகரங்களில் ஒன்றாகவும், கிழக்கில் பிரதான வர்த்தக மைய நகரமாகவும் இருந்து வருவதுடன் இங்கு மக்கள் வங்கியின் கல்முனை கிளைக்கான நிரந்தர கட்டிடம் இன்னும் கட்டப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்ற விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மக்கள் வங்கி தவிசாளருக்கு சுட்டிக்காட்டி இந்த கட்டிட நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும் இதன் போது மாவடிப்பள்ளி மற்றும் அதனை அண்டிய பிரதேச பொருளாதார நிலைகள், அரிசி ஆலைகளின் அமைவிடம், பல்வேறு வியாபார தளங்கள் உள்ள பிரதேசம், குறித்த பிரதேசத்தில் எந்த வங்கி களினதும் கிளைகள் இல்லை போன்ற பல்வேறு விஷயங்களை மக்கள் வங்கி தவிசாளருக்கு விளக்கி தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் ஒன்றை மாவடிப்பள்ளியில் அமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த விடயம் தொடர்பில் சகல விடயங்களையும் கேட்டறிந்த மக்கள் வங்கி தவிசாளர் உரிய அதிகாரிகளை அழைத்து கல்முனையில் மக்கள் வங்கி கிளையின் புதிய கட்டிடத்தை கட்ட தேவையான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக ஒதுக்குமாறு பணித்துள்ளார். கூடிய விரைவில் விலைமனு கோரப்பட்டு கட்டிட நிர்மாணப் பணிகளை ஓரிரு மாதங்களுக்குள் ஆரம்பித்து வேகமாக கட்டிடப் பணிகளை நிறைவு செய்து தருவதாகவும், மாவடிப்பள்ளியில் கூடிய விரைவில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் (ATM) நிறுவ தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் மக்கள் வங்கி தவிசாளர் சுஜீவ ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசிடம் உறுதியளித்துள்ளார்.
(நூருல் ஹுதா உமர்)