ஆப்கானை ரி20இல் எதிர்கொள்ளும் வனிந்து தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு..
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்கான வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை அணி இன்றைய தினம் இலங்கை கிரிக்கெட் சபையால் இன்று அறிவிக்கப்பட்டது.
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணி மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்றிருக்க முதல் டெஸ்ட் தொடர் இலங்கை வெற்றி கொண்டது. இந்நிலையில் தற்சமயம் இடம்பெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி ஒரு போட்டி மீதமிருக்க 2:0 என தொடரை வெற்றி கொண்டுள்ளது.
இந்நிலையில் இவ் விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய இத் தொடருக்கான சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இக் குழாத்தில் துடுப்பாட வரிசையிலே பெத்தும் நிசங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மேலும் சகலதுறை வீரர்களான முன்னால் அணித்தலைவர்களான தசுன் சானக, அஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா மற்றும் களித்து மென்டிஸ் ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள ரி20 அணியின் வேகப்பந்து வீச்சினை பலப்படுத்த மதீஷ பத்திரன, நுவன் துஷார மற்றும் டில்ஷான் மதுசங்க ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சுழல்பந்து வீச்சாளரான அனுபவமிக்க அகில தணஞ்சய மற்றும் மகேஷ் தீக்சன ஆகியோருடன் அணித்தலைவரும், நட்சத்திர வீரருமான வனிந்து ஹசரங்கவும் உள்ளமை இலங்கை அணியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 ரி20 போட்டிகளும் முறையே 17,19 மற்றும் 21 ஆகிய தினங்களில் தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)