15ஆவது இளையோர் கிரிக்கெட் உலகக்கிண்ணம். உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை மீண்டும் வீழ்த்தியது அவுஸ்திரேலியா
15ஆவது இளையோர் கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடரின் தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான இந்திய அணியை 79 ஓட்டங்களால் மிக இலகுவாக வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி 4ஆவது முறையாகவும் இளையோர் கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை தன் கரம் பற்றி அசத்தியது.
தென்னாபிரிக்காவில் இடம்பெற்று வந்த 15ஆவது இளையோர் உலகக்கிண்ணத் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருந்தன. இதில் முதல் சுற்று லீக் ஆட்டத்தில் ஒரு குழுவில் 5 அணிகள் வீதம் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு முதல் சுற்று லீக் ஆட்டம் இடம்பெற்றது. இம் முதல் சுற்றுப் போட்டியின் முடிவில் குழுநிலையில் அதிக புள்ளிகள் பெற்ற 12 அணிகள் 2ஆம் சுற்றான சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதி பெற்றுக் கொண்டன. அதற்கமைய சுப்பர் 6 சுற்றில் அதிக வெற்றிகளைப் பதவு செய்த 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தமது வரவை உறுதிப்படுத்திக் கொண்டன.
அதனடிப்படையில் நடப்புச் சம்பியனான இந்திய அணி, பாகிஸ்தான் அணி, அவுஸ்திரேலிய அணி மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய 4 அணிகளே அரையிறுதிக்குள் நுழைந்தன. இதற்கமைய கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் இந்திய அணி தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடி 2 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்து மீண்டும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அடுத்து கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற 2ஆவது அரையிறதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்தாடிய அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட்டினால் போராடி திறில் வெற்றியைப் பெற்றுக் கொண்டு இறுதிப் போட்டிக்குத் தன் வரவை உறுதிப்படுத்தியது.
இதற்கமைய இன்று (11) வில்லோவ்மூர் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற தீர்க்கமான இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. இதற்கமைய முதலில் களம் புகுந்த அவுஸ்திரேலிய அணக்கு ஹர்ஜாஸ் சிங் அரைச்சதம் கடந்து 55 ஓட்டங்களையும், அணித்தலைவரான வெய்ப்கன் 48 ஓட்டங்களையும், ஒலிவர் பீக் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது அவுஸ்திரேலிய அணி. பந்துவீச்சில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 254 ஓட்டங்கள் என்ற சவால்மிக்க வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்குக் களம் இறங்கிய இந்திய அணியின் ஆரம்ப வீரரான அடார்ஸ் சிங் 47 ஓட்டங்களையம், பின்வரிசையில் வந்த முருகன் அபிசேன் 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொள்ள மற்றைய வீரர்கள் மிகச் சொற்பமான ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்ப இந்திய இளையோர் அணியால் 43.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 174 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொள்ள முடிந்தது. இதனாhல் 79 ஓட்டங்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்த அவுஸ்திரேலிய இளையோர் அணி 4ஆவது முறையாகவும் இளையோர் கிரிக்கெட் உலகக்கிண்ணத்தின் சம்பியன் மகுடத்தினை தம் கரம் பற்றி அசத்தினர். பந்துவிச்சில் மஹ்லி மற்றும் மெக்மிலன் ஆகியொர் தலா 3 விக்கெட்டுக்களை வீத்தினர்.
இப் 15ஆவது இளையோர் கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் இந்திய அணியின் தலைவரான உதைய் சஹரான் 397 ஓட்டங்களுடன் முதலிட்த்தில் உள்ளார். மேலும் அதிக விக்கெட்டினை வீழ்த்தியவர்கள் வரிசையில் தென்னாபிரிக்க அணி வீரரான க்வெனா மப்ஹாக்கா 2 விக்கெட்டுக்களுடன் முதலிடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது. (அ)
(அரபாத் பஹர்தீன்)