ஆப்கானுக்கு எதிராக இலகு வெற்றி பெற்ற இலங்கை தொடரை தனதாக்கியது
ஆப்காணிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை தீர்மானிக்கும் 2ஆவது ஒருநாள் போட்டியில் சரித் அசலங்கவின் துடுப்பாட்டமும், வனிந்து ஹசரங்கவின் மிரட்டல் சுழல்பந்து வீச்சும் கைகொடுக்க இலங்கை அணி 155 ஓட்டங்களால் மிக இலகுவான வெற்றியைப் பெற்று ஒரு போட்டி மீதமிருக்க தொடரை 2:0 என கைப்பற்றியது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பெத்தும் நிசங்கவின் இரட்டைச் சதம் கை கொடுக்க 42 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் 2ஆவது போட்டி இன்று (11) கண்டி பல்லேகல மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
இதற்கமைய களம்நுழைந்த இலங்கை அணியின் ஆரம்ப விக்கெட் ஜோடியான பெத்தும் நிசங்க (18) மற்றும் அவிஸ்க பெர்ணான்டோ (5) ஆகியொர் ஏமாற்றம் கொடுத்தனர். இருப்பினும் அடுத்தடுத்து வந்த குசல் மென்டிஸ், சதீர சமரவிக்ரம மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் முறையே 61ஈ52 மற்றும் 50 ஓட்டங்களை விளாசினர். மேலும் மத்திய வரிசையில் வந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த சரித் அசலங்க 97 ஓட்டங்களை விளாசிக் கொடுக்க இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவிச்சில் அஸ்மத்துல்லாஹ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 309 ஓட்டங்கள் என்ற கடின இலக்கினை நோக்கி பதிலளித்த ஆப்காணிஸ்தான் அணிக்கு முன்வரிசை வீரர்களான இப்ராஹிம் சத்ரான் 54 ஓட்டங்களையும், ரஹ்மத் ஷh 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்து வலுச்சேர்த்தனர். இருப்பினும் அடுத்தடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் கொடுக்க அவ் அணியால் 33.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 153 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொள்ள முடிந்தது. இதனால் 155 ஓட்டங்களால் மிக இலகு வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க 2:0 என தொடரை தன் வசப்படுத்தியது. பந்துவீச்சில் சுழலில் மிரட்டிய வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டியமை குறிப்பிடத்தக்கது. (அ)
(அரபாத் பஹர்தீன்)