இரட்டைச் சதம் விளாசி வரலாற்றில் இடம்பிடித்த பெத்தும் நிசங்க..
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிசங்க ஆட்டமிழக்காமல் 210 ஓட்டங்களை விளாசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இரட்டைச் சதம் விளாசிய பட்டியலில் முதல் இலங்கை வீரராக தன் பெயரைப் பதித்துக் கொண்டார்.
25 வயதான வலதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிசங்க சில்வா இப்போதைய இலங்கை அணியின் ஓட்ட இயந்திரமாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் இலங்கை அணி பங்கேற்ற ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் இலங்கை அணி சார்பில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் பெத்தும் நிசங்க முதலிடம் வகிக்கிறார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இணைத்துக் கொள்ளப்படாத இவர் ஒருநாள் தொடரில் பெயரிடப்பட்டிருந்தார். இதற்கமைய இன்றைய தினம் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆரம்ப வீரராக அவிஷ்க பெர்ணான்டோவுடன் களம் நுழைந்தார் பெத்தும் நிசங்க.
போட்டியின் ஆரம்பம் முதலே இந்த ஜோடி மிக வேகமாக ஓட்டங்களைக் குவிக்க இருவரும் அரைச்சதம் கடந்து மிரட்டினர். பின்னர் பெத்தும் நிசங்க சதம் கடக்க முதல் விக்கெட் 182 ஓட்டங்களில் வீழ்ந்தது.
இருப்பினும் களத்தில் தொடர்ந்தும் நின்ற பெத்தும் நிசங்க 49.2 ஆவது ஓவரில் நான்கு ஓட்டத்தை விரட்டி அடித்து தனதும், இலங்கை அணியினதும் முதல் இரட்டைச் சதத்தை பதிவு செய்து அசத்தினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்ற பெத்தும் இன் இரட்டை சதத்தில் 8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 20 ஒநான்கு ஓட்டங்கள் அடங்குவதுடன் வெறும் 139 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இப் போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 381 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
மேலும் இலங்கை அணி சார்பில் இதற்கு முன்னர் அதி கூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரர்களாக 2000 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக சனத் ஜயசூரிய பெற்ற 189 ஓட்டங்களும், அடுத்தாக 2013ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக உபுல் தரங்க பெற்றுக்கொண்ட 174 ஓட்டங்களுமே இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. மேலும் இதுவரையில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்திய அணி வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் , சேவாக், ரோஹித் சர்மா (2) , இஷான் கிசன் மற்றும் சுப்மன் கில், பாகிஸ்தானின் பக்கர் ஸமான், அவுஸ்திரேலிய வீரரான கிலென் மெக்ஸ்வெல், மேற்கிந்தியத் தீவுகளின் கிரிஸ் கெய்ல், நியூஸிலாந்தின் மாட்டின் குப்டில் ஆகியோருடன் இன்றைய தினம் விளாசிய அசத்தல் இரட்டைச் சதத்துடன் பெத்தும் நிசங்கவும் இணைந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)