சகலதுறை பிரகாசித்த ஆஸி. போராடித் தோற்றது மே.இ. தீவுகள்..
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் டேவிட் வோர்னரின் அதிரடியும், அடம் சம்பாவின் சுழலும் கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி 11 ஓட்டங்களால் போராடி வெற்றதுடன் தொடரில் 1:0 என முன்னிலையும் பெற்றது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூவகைப் போட்டித் தொடரில் டெஸ்ட் தொடர் 1:1 என சமநிலை பெற்றிருந்தது. பின்னர் இடம்பெற்ற 3போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அவுஸ்திரேலிய அணி 3:0 வெள்ளையடித்து கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டி இன்று ஹார்போட்டில் இடம்பெற்றது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, அவுஸ்திரேலிய அணியை முதலில் துடுப்பாட்டப் பணித்தது. இதற்கமைய களம் கண்ட அவுஸ்திரேலிய வீரர்களில் டேவிட் வோர்னர் அரைச்சதம் கடந்து 70 ஓட்டங்களையும், ஜோஸ் இங்லிஸ் 39 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றனர். இதனால் அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் நீண்ட கால இடைவெளிக்குப் பின் இணைந்த ரஸல் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பின்னர் 214 என்ற கடினமான வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமைந்தாலும் மத்திய மற்றும் பின்வரிசை சொதப்பலாக அமைய அவ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொள்ள முடிந்தது.
இதனால் 11 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர்களான பிரண்டன் கிங் மற்றும் ஷார்லெஸ் ஆகியோர் முறையே 53 மற்றும் 42 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அடம் சம்பா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். போட்டியின் நாணயக டேவிட் வோர்னர் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)