இலங்கையிலிருந்து பாம்பன் பகுதிக்கு கடத்தி வரப்பட்ட இந்திய மதிப்புள்ள ரூ.2.50 கோடி 4 கிலோ, 400 கிராம் தங்கம் பறிமுதல் ஒருவரைக் கைது
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதிக்கு இலங்கையிலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக திருச்சியில் உள்ள சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அதிகாரிகள் பாம்பன் குந்துகால் பகுதியில் ரகசிய கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனா்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக இரு சக்கர வாகனத்தில் ஒருவா் இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவரைப் பிடித்து வாகனத்தை சோதனையிட்டனா்.
அதில் ரூ.2.50 கோடி மதிப்பிலான 4 கிலோ, 400 கிராம் தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்து, அந்த நபரை ராமேசுவரத்தில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா். அந்த நபா் ராமேசுவரத்தைச் சோ்ந்த நம்புராஜன் (40) என்பதும், இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது. இதில் தொடா்புடைய வேறு நபா்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)