விளையாட்டு

ஐசிசி புதிய டெஸ்ட் தரப்படுத்தல் முதல் முறையாக முதலிடம் பிடித்தார் பும்ரா..!

இன்றைய தினம் சர்வதேச கிரிக்கெட் பேரவை டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் மற்றும் அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருக்க இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா முதல் முறையாக பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒவ்வொரு தொடர் முடிவிலும் வீரர்கள் மற்றும் அணிகளின் தரவரிசையினை வெளியிட்டு வருவது வழக்கம். அந்தவகையில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர் நிறைவு பெற்றிருந்த நிலையிலும் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளின் 2ஆவது டெஸ்ட் போட்டி அதுபோன்று நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆகியன நிறைவடைந்துள்ள மையால் இன்றைய தினம் புதிய தரவரிசையினை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய கடந்த தரப்படுத்தலில் 4ஆம் நிலையிலிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிராக 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் கைப்பற்றிய 6 மற்றும் 2ஆவது இன்னிங்ஸில் கைப்பற்றிய 3 விக்கெட்டுக்களோடு 881 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். மேலும் கடந்த தரப்படுத்தலில் முதலிடத்தில் இருந்த அஷ்வின் 2ஆம் இடத்திற்கு கீழிறங்கியுள்ளார். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜெயசூரிய கடந்த தரப்படுத்தலில் 9ஆம் இடத்திலிருந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுக்களை வீழ்த்தியமையால் 783 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

துடுப்பாட்டத் தரப்படுத்தலில் தொடர்ந்தும் கேன் வில்லியம்ஸன் 864 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். 2ஆம் நிலையில் இருந்த இங்கிலாந்தின் ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிராக சோபிக்கத் தவறியமையால் ஒரு இடம் கீழிறங்கி 3 ஆம் இடத்திற்குச் செல்ல 3ஆம் இடத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் ஸ்டீபன் ஸ்மித் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சிறப்பாக துடுப்பெடுத்தாடியமையால் 818 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேலும் இலங்கை அணியின் திமுத் கருணாரட்ன தொடர்ந்தும் 9 ஆம் இடத்தில் நீடிக்கிறார். ஆப்கான் அணிக்கு எதிராக சதம் விளாசிய தினேஷ் சந்திமால் தொடர்ந்தும் 23 ஆவது இடத்திலும் மற்றைய வீரரான அஞ்சலோ மெத்யூஸ் கடந்த தரப்படுத்தலில் 28 ஆவது இடத்தில் இருந்து 663 புள்ளிகளுடன் புதிய தரப்படுத்தலில் 24 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

அணிகளின் தரப்படுத்தலில் அவுஸ்திரேலிய அணி 117 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்திலும் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் முறையே 117 மற்றும் 115 புள்ளிகளுடன் 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களில் உள்ளன. இலங்கை அணி 79 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 8ஆவது இடத்தில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *