உள்நாடு

பரகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற 76 ஆவது சுதந்திர தின விழா வைபவம்

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவத்தகம பிரதேச சபைக்குற்பட்ட பரகஹதெனிய பிரதேசத்திலுள்ள ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசலில் விசேட தேசிய கொடியேற்றும் நிகழ்வு நேற்று காலை (04.04.2024) பள்ளிவாசல் தலைவர் எம்.எம். ஜெஸ்மின் றஹ்மானி தலைமையில் பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.

பிரித்தானியாவிடம் இருந்து இலங்கையை மீட்டெடுத்த வெற்றியை கொண்டாடும் சுதந்திர வீரர்களை நினைவூட்டும் வகையில் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தேசிய கொடியினை உப தலைவர் ஏ.டபிள்யு. அன்வர் கியாசிம் ஏற்றி வைத்தார். அத்துடன் இந்த சுதந்திர தின நிகழ்வின் நினைவாக பள்ளிவாசல் வளாகத்தில் மூன்று மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்வின் போது ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசல் சுமார் ஆறு நுற்றாண்டு கால நீண்ட வரலாறு கொண்ட பள்ளிவாசல் என்பதை பள்ளிவாசலின் செயலாளர் இர்ஷாட் நினைவூட்டினார். மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பரகஹதெனியவின் கிராம உத்தியோகத்தர் பிரியதர்ஷினி பெரேரா பள்ளிவாசலின் செயற்பாடுகள் குறித்து பாராட்டுக்களை தெரிவித்ததுடன் பள்ளிவாசலின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த சுதந்திர தின நிகழ்வில் மாவத்தகம பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் ஏ.எம்.எம். ஸால்தீன், பரகஹதெனிய கிராம உத்தியோகத்தர் பிரியதர்ஷினி பெரேரா உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

(அஹ்ஸன் அப்தர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *